சீனாவில் இன்று வெளியாகிறது 2.0! ஆயிரம் கோடி வசூல் சாத்தியமா?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவான 2.0 திரைப்படம் இன்று சீனாவில் 10,000 திரையரங்குகளில் வெளியாகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான 2.0 திரைப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி சுமார் 600 கோடி வரை வசூல் சாதனை செய்தது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் படத்தில் உருவான 2.0 திரைப்படம், செல்போன் கம்பெனிகளின் அதிக லாப ஆசையால் அழியும் பறவை இனத்தை பற்றியும் அதற்காக போராடும் பறவை மனிதன் மற்றும் அவனுக்கும் எந்திர மனிதனுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து படமாக்கப்பட்டது.

இந்தியாவில் விமர்சன ரீதியாக பெரிய வெற்றியை 2.0 அடையவில்லை என்றாலும், வசூல் ரீதியாக 600 கோடி வரை வசூலித்தது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாகுபலி படத்தை போல சீனாவிலும் 2.0 திரைப்படத்தை வெளியிட்டு, அங்கு சுமார் 1000 கோடி வரை வசூலிக்கலாம் என்ற முடிவின் பேரில் இன்று செப்டம்பர் 6ம் தேதி சீனாவில் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் 2.0 திரைப்படம் திரையிடப்படுகிறது.

தங்கல், பாகுபலி படங்கள் சீனாவில் செய்த வசூல் சாதனையை 2.0 திரைப்படமும் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

More News >>