தனி சோபா தேவையில்லை.. பிரதமர் மோடியின் எளிமை : பியூஸ் கோயல் பாராட்டு
ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, அங்கு தனக்கு போடப்பட்டிருந்த சோபாவை ஒதுக்கி விட்டு, சாதாரண நாற்காலியில் அமர்ந்தார். இந்த வீடியோவை ட்விட்டரியில் வெளியிட்டுள்ள ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், பிரதமரை பாராட்டியுள்ளார்.
கிழக்கு பிராந்திய பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு விளாடிவோஸ்டோக் நகரில் அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. பின்னர், மாநாட்டில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து, ஜப்பான், மலேசிய நாடுகளின் பிரதமர்களை சந்தித்து பேசினார். மேலும், புடினுடன் சேர்ந்து கப்பல் கட்டும் தளத்தைப் பார்வையிட்டார். இப்படி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு மோடி, இன்று(செப்.) அதிகாலையி்ல் டெல்லிக்கு திரும்பினார்.
இந்நிலையில், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அது ரஷ்யாவில் நடந்த ஒரு போட்டோசெஷனில் பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்று செல்லும் காட்சி இடம்பெற்றிருந்தது. மேலும், போட்டோசெஷனில் மோடிக்கு மட்டும் தனி சோபா போடப்பட்டிருந்தது. மோடி அங்கு சென்றதும், ‘எனக்கு மட்டும் ஏன் இந்த சோபா?’ என்று கூறி, தனக்கும் அந்த வரிசையில் உள்ள நாற்காலியை போடுமாறு கூறினார். உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அதே போல் நாற்காலியை எடுத்து கொண்டு ஓடிவந்தனர். பின்னர், வரிசையாக போடப்பட்ட நாற்காலியில் மோடி அமர்ந்து போட்டோ செஷனில் பங்கேற்றார்.
இந்த வீடியோவை வெளியிட்ட பியூஸ் கோயல், ‘பிரதமர் மோடி தனக்கு தரப்பட்ட சிறப்பு ஏற்பாட்டை தவிர்த்து சாதாரண நாற்காலியில் அமர்ந்துள்ளார். அவரது எளிமையை பார்த்து எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள்’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.