சிதம்பரத்திடம் 450 கேள்விகள் 90 மணி நேர விசாரணை : சிபிஐ கொடுமைப்படுத்தியதா?
சிபிஐ காவலில் சிதம்பரம் இருந்த போது அவரை கேள்வி மேல் கேள்வி கேட்டு கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 90 மணி நேர விசாரணையில் 450 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு ரூ.305 கோடி அந்நிய முதலீடு வந்ததற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, சிபிஐ பதிவு செய்த ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதித்தது. 15 நாட்களாக சிபிஐ தலைமை அலுவலகத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் தாக்கல் செய்த மனுக்களின் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தன.
இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கப்பிரிவு தொடுத்துள்ள வழக்கில், சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, சிபிஐ காவல் முடிந்து சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு சிபிஐ காவல் முடிந்ததால், ஜாமீனில் விடுவிக்குமாறு அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதை நீதிபதி ஏற்கவில்லை. இதையடுத்து திகார் சிறையில் செப்.5ம் தேதி இரவு அடைக்கப்பட்டார். இதற்கிடையே, சிபிஐ காவலில் சிதம்பரம் 15 நாள் வைக்கப்பட்டிருந்த போது அவரை சிபிஐ அதிகாரிகள், கொடுமைப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, அவரிடம் அவ்வப்போது விசாரணை நடத்தியதாகவும், கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் அவரிடம் 90 மணி நேரம் விசாரணை நடைபெற்றதாகவும், அவரிடம் 450 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அவர் எந்த கேள்விக்கும் சரியான பதில் தராமல் ஒத்துழைக்க மறுத்தார் என்றும் அவரை எவ்வகையிலும் துன்புறுத்தவில்லை என்றும் சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.