தமிழகத்திற்கு காவேரி நீர் அளவு குறைக்கப்பட்டது அநீதி -nbsp ராமதாஸ் nbspகருத்து
தமிழகத்திற்கு காவேரி நீர் அளவு குறைத்தது அநீதி என்றும், மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு வரவேற்பு தெரிவித்தும் பா.ம.க நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :
தமிழக விவசாயிகள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த காவிரி நீர் பிரச்சினை குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வழங்கப்பட்ட அனைத்து அம்சங்களையும் உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரின் அளவில் 14.74 டி.எம்.சி.யை குறைத்து விட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் இந்த அம்சம் மட்டும் மிக ஏமாற்றமளிக்கிறது. இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.
காவிரியில் தமிழகத்திற்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை நடுவர் மன்றம் நிர்ணயித்திருந்த 192 டி.எம்.சி.யுடன் கூடுதலாக 72 டி.எம்.சி. சேர்த்து 264 டி.எம்.சி. வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியிருந்த நிலையில், அதை ஏற்காத உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கான தண்ணீரின் அளவை 177.25 டி.எம்.சி.யாக குறைத்திருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு 14.74 டி.எம்.சி. குறைந்துள்ளது. இதன்மூலம் கர்நாடகத்திலிருந்து வழங்கப்படும் தண்ணீர், தமிழகத்திலிருந்து கிடைக்கும் தண்ணீர் ஆகிய இரண்டையும் சேர்த்து தமிழகத்தின் பங்கு 419 டி.எம்.சி.யில் இருந்து 404.25 டி.எம்.சி.யாக குறைந்து விட்டது. இதற்காக கூறப்பட்டுள்ள காரணங்களை ஏற்க முடியாது.
தமிழ்நாட்டில் 10 டி.எம்.சி. அளவுக்கு நிலத்தடி நீர் இருப்பதாகவும், அதைத் தமிழகம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைக் கருத்தில் கொண்டு தான் தமிழகத்திற்கான தண்ணீரின் அளவு குறைக்கப் பட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. காவிரி நீர் பிரச்சினை என்பதே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கிடைக்கும் நீரை பகிர்ந்து கொள்வது தானே தவிர, நிலத்தடி நீரை பயன்படுத்துவது பற்றியது அல்ல. அதுமட்டுமின்றி, பெங்களூரையொட்டியுள்ள ஏரி, குளங்களில் பல டி.எம்.சி. நீரை கணக்கில் காட்டாமல் சட்டவிரோதமான முறையில் கர்நாடகம் தேக்கி வைத்துள்ளது. அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கர்நாடகத்துக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகமும் இதில் கோட்டை விட்டு விட்டது.
கர்நாடகத்தில் பெங்களூர் நகரம் மட்டுமே காவிரி நீரை நம்பியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், வேலூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய 7 மாநகராட்சிகள், 19 மாவட்டங்களில் உள்ள 5 கோடி மக்கள் காவியைத் தான் குடிநீருக்காக நம்பியுள்ளனர். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமிழகத்திற்கான காவிரி நீரின் அளவு குறைக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
1924-ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட போது காவிரியில் தமிழகத்திற்கான பங்கு 575.68 டி.எம்.சி.யாக இருந்தது. அதன்பின்னர் 1970-களில் காவிரி பிரச்சினை தீவிரமடைந்த போது 1972-ஆம் ஆண்டில் தமிழகத்தின் பங்கு 489 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் போது மேலும் குறைக்கப்பட்டது. நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின் போது 419 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்ட தமிழகத்திற்கான தண்ணீரின் அளவு இப்போது 404 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது அரை நூற்றாண்டில் 170 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் இழந்துள்ளது. இது தான் அரை நூற்றாண்டு கால திராவிட ஆட்சிகளின் சாதனை ஆகும்.
அதேநேரத்தில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக குடியரசுத் தலைவர் மேற்பார்வையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். காவிரி நீரை மாதாந்திர அடிப்படையில் தமிழகத்திற்கு திறந்து விடுவதற்காக நடுவர் மன்றம் தயாரித்த அட்டவணை பின்பற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதும் தமிழகத்திற்கு சாதகமான அம்சம் தான். அதேநேரத்தில் தமிழகத்திற்கு சாதகமான இந்த அம்சங்கள் அனைத்தும் இயல்பாக நடந்து விடும் என்று நினைத்து தமிழக அரசு அலட்சியமாக இருந்தால்மொத்த தமிழகமும் ஏமாந்து விடும்; பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும்.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றம் இப்போது அளித்துள்ள தீர்ப்பு தான் இறுதியானது என்றும், இதை எதிர்த்து எந்த வகையிலும் மேல்முறையீடு செய்ய இயலாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போதுள்ள நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலைக் கணக்கில் கொண்டு அந்த மாநிலத்திற்கு சாதகமாக மத்திய அரசு நடந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே, உச்சநீதிமன்றம் அளித்துள்ள அவகாசத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை சந்தித்து வலியுறுத்த தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசும் இந்த விஷயத்தில் பாகுபாடு காட்டாமல் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.
தமிழகத்திற்கான காவிரி நீரின் அளவை அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வை அனுக முடியுமா? என்பதற்காக சட்டப்படியான சாத்தியக் கூறுகளையும் தமிழக அரசு ஆராய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.