நிலவில் நாளை அதிகாலை தரையிறங்கும் லேண்டர் விக்ரம்.. இஸ்ரோவில் மோடி பார்வையிடுகிறார்

நிலவைச் சுற்றி வரும் லேண்டர் விக்ரம் நாளை அதிகாலை 1.55 மணிக்கு நிலவில் தரையிறக்கப்படுகிறது. இந்நிகழ்வை இஸ்ரோ கட்டுப்பாட்டறையில் இருந்து பிரதமர் மோடி நேரலையில் பார்க்கிறார். அவருடன் பள்ளி மாணவர்களும் கலந்து கொள்கின்றனர்.

இந்திய விண்வெளிக் கழகம்(இஸ்ரோ), நிலவின் தென்துருவப் பகுதியில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவியது. புவி வட்டப் பாதையில் சுற்றி வந்த சந்திரயான்-2, ஆகஸ்ட்2ம் தேதியன்று நிலவின் வட்டப் பாதைக்கு அனுப்பப்பட்டது. நிலவில் இறங்கும் வரை கொஞ்சம், கொஞ்சமாக அதை நெருங்கும் வகையில் அடுத்தடுத்த வட்டப்பாதைகளில் சந்திரயான் இறக்கப்பட்டது.

இதன்பின்னர், சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து லேண்டர் விக்ரம் பிரித்து விடப்பட்டது. தற்போது அது நிலவுக்கு அருகே 35 கி.மீ. தூரத்தில் உள்ள வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்குவதற்கு சரியான இடத்தை இன்று தேர்வு செய்து மேப் மற்றும் படங்களை இஸ்ரோ கட்டுப்பாட்டறைக்கு அனுப்பும். இதைத் தொடர்ந்து, நாளை அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் குறிப்பாக 1.55 மணிக்கு நிலவின் லேண்டர் விக்ரமை தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏற்பாடு வருகின்றனர். லேண்டர் விக்ரம் நிலவில் திட்டமிட்டபடி தரையிறங்குவதை வெற்றிகரமாக முடிக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள்.

கடந்த ஜூலை 22ம் தேதி சந்திரயான்2, விண்ணில் ஏவப்பட்டது முதல் பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டறையில் விஞ்ஞானிகள் தினமும் 16 மணி நேரம் வேலை பார்த்து வருகின்றனர். சந்திரயான் சுற்றுப்பாதை, அதன் செயல்பாடுகள் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், லேண்டர் விக்ரம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரில் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று(செப்.6) இரவு பெங்களூருக்கு வருகிறார். இங்குள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டறையில் விஞ்ஞானிகளுடன் அவர் இந்த நிகழ்வை நேரலையில் பார்வையிடுகிறார். பிரதமருடன் 70 பள்ளி மாணவர்களும் இந்த அற்புத நிகழ்வை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நிலவில் லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக தரையிறங்கி விட்டால், அடுத்து அது நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிமவளங்கள் மற்றும் இதர அமைப்புகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய உதவியாக இருக்கம். நிலவில் விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா 4வது இடத்தைப் பிடிக்கிறது. ஏற்கனவே சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, சீனா நாடுகள் நிலவிற்கு விண்கலங்களை அனுப்பியிருக்கின்றன. அதே சமயம், நிலவின் தென்துருவப் பகுதில் முதன்முதலில் ஆய்வு செய்யத் தொடங்கியிருப்பது இந்தியாதான்.

More News >>