திமுக மீண்டும் வென்றால்தான் தமிழ்நாட்டுக்கு விமோசனம் : மு.க.ஸ்டாலின் பேச்சு

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை நாங்கள் தோற்கடிக்கவில்லை, மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தி.மு.கழக உயர் நிலை திட்டக்குழு உறுப்பினர்களில் ஒருவரான மு.பெ.சாமிநாதன் அவர்கள் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.

அவர் பேசிய விவரம் பின்வருமாறு:பி.ஜே.பி.யின் முன்னணி தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இங்கே மனம் திறந்து பேசினார். நாம் அவர்களை வீழ்த்தி விட்டோம் என்று சொன்னார். நான் அதை கொஞ்சம் திருத்திச் சொல்லுகின்றேன். நாங்கள் உங்களை வீழ்த்தவில்லை, தோற்கடித்திருக்கிறோம் அவ்வளவுதான்!

நாங்கள் தோற்கடித்தோம் என்று கூட சொல்ல விரும்பவில்லை. மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள். நான் அரசியல் அதிகம் பேச விரும்பவில்லை. மற்ற கட்சித் தலைவர்கள் இருக்கும்பொழுது பேசினால் அது நாகரீகம் அல்ல. இருந்தாலும் பேசாமல் போய்விட்டால் சாமிநாதனுக்கு கொஞ்சம் கோபம் வந்துவிடும். அவருக்கு வருகின்றதோ இல்லையோ உங்களுக்கு நிச்சயம் வரும். எனவே, நாகரிகத்தோடு தான் நான் பேச விரும்புகின்றேன்.

இப்போது பொருளாதார சூழ்நிலை எந்த நிலையில் போய்க் கொண்டிருக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியும். கோவை திருப்பூர் போன்றவை அடங்கிய கொங்கு மண்டலம் இது. இங்குள்ள தொழிற்சாலைகள் மூடப்படக் கூடிய ஒரு கொடுமை, அதில் பணிபுரிந்து கொண்டிருக்கக் கூடிய தொழிலாளர்கள் அனைவரும் வேலையை இழக்கக்கூடிய ஒரு அக்கிரமம், 5 சதவிகிதத்திற்கும் கீழே பொருளாதாரம் போய்க் கொண்டிருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார சரிவின் விளிம்பில் இன்றைக்கு கோவையும் திருப்பூரில் இருந்து கொண்டிருக்கின்றன. எனவே, இவற்றையெல்லாம் நாம் சரி செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள்.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி தொடர்ந்தால்தான் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு விமோசனம் கிடைக்கும். எனவே, அதை நீங்கள் உணர்ந்து, அதற்கேற்ற வகையில் உங்களுடைய ஒத்துழைப்பை நீங்கள் தொடர்ந்து தி.மு.கழகத்திற்கு வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.இவ்வாறு அவர் பேசினார்.

More News >>