திகார் சிறையில் சிதம்பரம்... தூக்கமில்லா முதல் இரவு : டி.வி, நியூஸ்பேப்பர் பார்க்க அனுமதி
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு தனி அறை ஒதுக்கப்பட்டாலும் சிறப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. மற்ற கைதிகள் போல் டி.வி. பார்ப்பதற்கும், நியூஸ்பேப்பர் படிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு 7ம் நம்பர் அறை ஒதுக்கப்பட்டது. அந்த அறையில்தான் ஏற்கனவே அவரது மகன் கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்டிருந்தார். சிதம்பரம் தனது கண்ணாடி, மருந்துகள் ஆகியவற்றை எடுத்து வர அனுமதிக்கப்பட்டிருந்தது. முன்னாள் உள்துறை அமைச்சரான அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு இருந்தது.
ஆனால், சிறையில் அவருக்கு சிறப்பு பாதுகாப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. இரவு உணவாக ரொட்டி, சப்ஜி அவருக்கு தரப்பட்டது. மேலும், படுக்கை, போர்வை ஆகியவை தரப்பட்டது. இரவில் அவர் சரியாக தூங்கவில்லை என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலை 6 மணிக்கு அவருக்கு டீ தரப்பட்டது. மேலும், காலை உணவாக பிரட், ரொட்டி, சப்பாத்தி உள்ளிட்ட மெனு அவருக்கு கூறப்பட்டிருக்கிறது. சிறையில் அவர் தனது அறையில் வெளியே சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற கைதிகளுக்கு உள்ளது போல் டி.வி, நியூஸ் பேப்பர் போன்ற வசதிகள் செய்யப்பட்டன என்று சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.