ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு.. சிபிஐ மீது நீதிபதி கோபம்.. தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவினர் தொடர்ந்து வாய்தா கேட்டு வந்ததால், நீதிபதி கோபம் அடைந்தார். வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு ரூ.305 கோடி அன்னிய முதலீடு வந்ததில் முறைகேடு செய்ததாக ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதே போல், ஏர்செல் நிறுவனத்திற்கு மலேசிய நிறுவனமான மேக்ஸிஸ் நிறுவனம் வெளிநாட்டு முதலீடு அளித்ததிலும், சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் ஊழல் புரிந்ததாக சிபிஐ ஒரு வழக்கு தொடர்ந்தது. இந்த விவகாரத்திலும் சட்டவிரோத பணிபரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி, அமலாக்கப்பிரிவு தனியாக வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொள்வது தொடர்பான வாதங்கள் நடைபெற்று வந்தன. இன்று இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது வெளிநாடுகளில் இருந்து தகவல் பெற வேண்டியுள்ளதால் விசாரணையை அக்டோபர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்குமாறு சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி சைனி,‘‘அரசுதரப்பில் ஒவ்வொரு முறையும் வாய்தா கேட்பதே வழக்கமாகி விட்டது. எனவே, தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணையை தள்ளி வைக்கிறேன். வெளிநாடுகளில் இருந்து தகவல் பெற்றவுடன் நீதிமன்றத்தை அணுகுங்கள்’’ என்று கூறி, விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

More News >>