விமர்சனம்: மாட்டிக் கொண்டது யார் மகாவா? முனியா?

நான் கடவுள், அவன் இவன் படங்களுக்கு பிறகு ஆர்யாவுக்கு நன்றாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ள மகாமுனி திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

மெளனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மகாமுனி. இந்த படத்தில் ஆர்யா மகா மற்றும் முனி என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த ஆண்டு வெளியான தடம் படத்திற்கு பிறகு இரட்டை வேடை படமாக வெளிவந்து மிரட்டியிருக்கிறது மகாமுனி.

டாக்ஸி டிரைவர் மற்றும் அரசியல்வாதி இளவரசுக்காக கொலை செய்யும் அடியாள் மகாவாக ஆர்யா ஒரு வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு இந்துஜா மனைவியாக நடித்துள்ளார். ஒரு குழந்தையும் இருக்கின்றது.

முனி கதாபாத்திர ஆர்யா, பக்திமானாகவும், விதை பந்துகளை வீசி இயற்கை விவசாயத்தை செழிக்கச் செய்யும் சாதுவாகவும், நல்ல மனிதனாகவும் இன்னொரு வேடத்தில் பாராட்டுக்களை அள்ளுகிறார்.

அந்த ஊரில் கருப்புச் சட்டை போட்டு, கெத்தாக திரியும் கல்லூரி மாணவி மஹிமா நம்பியாருக்கு, சேவை செய்யும் ஆர்யாவை பார்த்த உடனே காதல் வருகிறது.

ஆனால், சாதி வெறி பிடித்த மஹிமாவின் அப்பா ஜெயபிரகாஷ், இந்த காதலுக்கு இடஞ்சலாக இருக்கிறார். கதை இப்படி நகர, ஒரு கொலையை செய்துவிட்டு, பக்திமான் ஆர்யா இருக்கும் ஈரோடு மாவட்டத்திற்கு தலைமறைவாகிறார்.

அவரை துரத்தி வரும் காவல்துறையினர், வழக்கம்போல ஆள் மாறாட்டமாக இந்த ஆர்யாவை கைது செய்து கொண்டு போகின்றனர்.

இறுதியில், என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதையாக இருக்கிறது.

வழக்கம் போல், இரட்டை கதாபாத்திரம் என்றால், நடக்கும் பழைய கதையை சுவாரஸ்யமாகவும், புதிய திரைக்கதை மொழியில் சாந்தகுமார் கூறியிருக்கும் விதம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி படத்துடன் நம்மை ஒன்ற வைக்கிறது.

நிச்சயம் மகாமுனி திரைப்படம் ஆர்யாவுக்கு பல திசைகளில் இருந்தும் பாராட்டுக்களை கொண்டு வந்து சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு, நாயகனுக்கு சமமாக இரண்டு நாயகிகளுக்கும் நடிக்க வாய்ப்பு கொடுத்திருப்பது தமிழ் சினிமாவில் வரவேற்க வேண்டிய விஷயமாக பாராட்டப்பெறுகிறது.

மகாமுனி மகத்தான வெற்றி – சினி ரேட்டிங்: 3.75/5.

 

More News >>