ஆந்திராவுக்கு ரூ.6000 கோடி கடன் தர என்.டி.பி. வங்கி ஒப்புதல்
ஆந்திராவின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக ரூ.6 ஆயிரம் கோடி கடன் தருவதற்கு என்.டி.பி. வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
ஆந்திராவில் கடந்த ஜூனில் நடைபெற்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் தோல்வியடைந்தது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆனார். சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவதற்கு உலக வங்கி, 2 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தருவதற்கு ஒப்புதல் அளித்திருந்தது. அதன்பின், மத்திய அரசு கேட்டுக் கொண்டதால், அந்த கடன் கொடுப்பதை நிறுத்தி விட்டது.
இந்நிலையில், ஷாங்காய் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் புதிய வளர்ச்சி வங்கி(நியூ டெவலப்மென்ட் பேங்க்), தற்போது ஆந்திராவின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ.6 ஆயிரம் கோடி கடன் தருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கடனை 32 வருடங்களுக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும். இந்த வங்கியின் துணைத் தலைவர் ஜோங், திட்ட இயக்குனர் ராஜ்புர்கர் ஆகியோர் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர். இதன்பின்பு, ரூ.6 ஆயிரம் கோடி கடன் தருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதை தெரிவித்தனர்.
அமராவதி கட்டமைப்புக்கு தருவதாக அறிவித்த கடனை உலக வங்கி திடீரென நிறுத்தியதற்கு அந்த திட்டங்களில் நடைபெற்ற ஊழலே காரணம் என்று ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார். ஆனால், மத்திய பிஜேபி அரசுதான் உலக வங்கியிடம் ஆந்திராவுக்கு கடன் தரக் கூடாது என்று தடுத்து விட்டதாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியினர் குற்றம்சாட்டினர்.