தமிழக அரசின் வேலைவாய்ப்பு முகாம்: சென்னையில் நாளை நடக்கிறது
தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் வேலை வாய்ப்பு முகாம் நாளை சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெறுகிறது.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் தமிழக அரசு அவ்வப்போது வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், நாளை சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர்.தியாகராயா கல்லூரி வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த முகாம் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்வதால், வாய்ப்பை தவறவிட வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்துக் கொள்ள வேண்டும் என்றும் வரும்போது கல்விச்சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையை கொண்டு வரும்படியும் கோரப்பட்டுள்ளது.
மேலும், இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் www.ncs.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.