பாஜக ஆட்சியின் நூறு நாட்களில் வரலாற்று சாதனை புரிந்துள்ளோம்.. பிரதமர் மோடி பெருமிதம்
தேசிய ஜனநாயக கூட்டணியின் 2வது ஆட்சியில் நூறு நாட்களில் வரலாற்று சாதனை புரிந்துள்ளோம் என்று பிரதமர் மோடி பெருமைப்பட்டு கொண்டார்.
பெங்களூருவில் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு நேற்றிரவு சென்ற பிரதமர் மோடி, விஞ்ஞானிகளுடன் சந்திரயான்2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இன்று காலை 8 மணிக்கு அங்கிருந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பின்னர், அவர் மும்பை புறப்பட்டு சென்றார். அங்கு அவரை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்வர் பட்நாவிஸ் வரவேற்றனர். பின்னர், அவர் லோக்மான்ய சேவா சங்க திலக் மந்திர் கோயிலுக்கு சென்று விநாயகரை வணங்கினார்.
இதன்பின், மும்பை மெட்ரோ ரயில் துறையின் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார் மோடி. அப்போது அவர் பேசுகையில், ‘‘தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 2வது ஆட்சியில் நூறு நாட்களில் வரலாற்று சாதனைகளை புரிந்துள்ளோம். ஜல்ஜீவன் மிஷனாகட்டும், வேறு துறைகளாக இருக்கட்டும்.
எல்லாவற்றிலும் வேகமாக செயல்பட்டு வருகிறோம். ஒவ்வொரு விவசாயிக்கும் பயன் கிடைக்க பாடுபடுகிறோம். முத்தலாக் கொடுமையில் இருந்து இஸ்லாமிய பெண்களை பாதுகாத்துள்ளோம். கடந்த காலங்களிலும், நிகழ்காலத்திலும் நடைபெறும் விஷயங்களைக் கொண்டு எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம். 5 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறோம்’’ என்றார்.