வளையல்களை அனுப்பவா? பாக். அனுப்பிய சங்கேத வார்த்தை.. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தகவல்

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சங்கேத வார்த்தைகள் அடங்கிய மெசேஜ்களை இடைமறித்து கேட்டிருக்கிறோம் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து அஜித் தோவல் அளித்த பேட்டி வருமாறு:

காஷ்மீரில் மொத்தம் உள்ள 199 போலீஸ் ஸ்டேஷன்களில் 10 ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தான் இப்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நூறு சதவீத தொலைபேசிகள் இயக்கப்படுகின்றன. அரசியல் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவே காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அரசியல்சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு காஷ்மீரில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் எப்படியாவது பிரச்னை ஏற்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முயற்சிக்கிறது. பாகிஸ்தானில் இருந்து 230 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் அனுப்பப்பட்டிருக்கின்றனர். அவர்களில் பலரை கைது செய்துள்ளோம். சிலர் ஊடுருவி விட்டனர்.

இந்தியாவின் எல்லையில் இருந்து பாகிஸ்தானுக்குள் 20 கி.மீ. தூரத்திற்கு உட்பட்ட இடங்களில் உள்ள தொலைத் தொடர்பு கோபுரங்களில் இருந்து இந்தியாவுக்கு வரும் தகவல்களை இடைமறித்து கேட்டிருக்கிறோம். ‘‘எப்படி இவ்வளவு லாரிகளில் ஆப்பிள் கொண்டு செல்லப்படுகிறது. அதை உங்களால் தடுக்க முடியவில்லையா? உங்களுக்கு வளையல்களை அனுப்பி வைக்கவா?’’ என்று பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் சங்கேத வார்த்தைகள் கொண்ட மெசேஜ்களை இடைமறித்து கேட்டிருக்கிறோம். பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் இருந்து காஷ்மீர் மக்களை பாதுகாப்பதற்கு பெருமளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அஜித் தோவல் கூறினார்.

More News >>