என்னை மாமிசத் துண்டுபோல வியாபாரம் செய்தார் அந்த தொழிலதிபர் - அமலா பால் ஆவேசம்
தொழிலதிபர் அழகேசன் தன்னை மாமிசத் துண்டுபோல வியாபாரம் செய்ய அந்த நபர் முயன்றார் என்று நடிகை அமலா பால் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில் பிரபல நடிகை அமலா பால் தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியிலான தொல்லையை வெளியில் சொன்னால் அவமானம் என்று கருதாமல் புகாராக்கியிருக்கிறார்.
மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியொன்றுக்காக சென்னையில் ஜனவரி மாதம் 31ஆம் தேதி ஒத்திகையில் இருந்தபோது, அழகேசன் என்ற தொழிலதிபர் தன்னைப் பாலியல் தொல்லைக்கு ஆட்படுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும், அவர் மலேசியாவில் உள்ள பணக்காரர் ஒருவர் கொடுக்கும் தனிப்பட்ட விருந்தில் கலந்துகொள்ள வற்புறுத்தியதாகவும், இரவு விருந்து குறித்து, தான் குறுக்கு கேள்வி கேட்டபோது, முட்டாள்தனமாக நடந்துகொள்ள வேண்டாம்; நீங்கள் குழந்தை இல்லை என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் அந்தப் புகாரின் பேரில் அழகேசனைக் கைது செய்துள்ளனர். அமலா பாலின் இந்தத் துணிச்சலான நடவடிக்கையைப் பலரும் பாராட்டியுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷாலும் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த அமலா பால், தன்னை மாமிசத் துண்டுபோல வியாபாரம் செய்ய அந்த நபர் முயன்றார் என்றும், ஒவ்வொரு பெண்ணும் தனக்கெதிரான பாலியல் தொல்லைகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து நிற்பது அவர்களின் கடமை என்றும் கூறியிருக்கிறார்.