தலைமை நீதிபதி மாற்றத்துக்கு எதிர்ப்பு.. வக்கீல்கள் நாளை போராட்டம்
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் வக்கீல்கள் நாளை(செப்.9) போராட்டம் நடத்துகின்றனர்.
இந்தியாவில் உள்ள ஐகோர்ட் தலைமை நீதிபதிகளில் மூத்த நீதிபதி, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி. இவரை மேகாலயா ஐகோர்ட்டுக்கும், அங்குள்ள தலைமை நீதிபதி மிட்டலை சென்னை ஐகோர்ட்டுக்கும் பணியிட மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது. சென்னை ஐகோர்ட் ஆங்கிலேயர் ஆட்சியில் துவக்கப்பட்ட சார்ட்டர்டு ஐகோர்ட்டுகளில் ஒன்று.
இந்த ஐகோர்ட்டில் இருந்து மிகச் சிறிய ஐகோர்ட்டான மேகாலயா ஐகோர்ட்டுக்கு தன்னை மாற்றுவதை தஹில் ரமானி, அவமானமாக கருதினார். தன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், இப்படி மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாறுதல் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு கொலிஜியத்திற்கு வேண்டுகோள் அனுப்பினார். ஆனால், அதை சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் நிராகரித்தது. இதையடுத்து, தஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்து, ஜனாதிபதிக்கும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அவரது ராஜினாமாவை சுப்ரீம் கோர்ட் இன்னும் ஏற்கவில்லை.
இதற்கிடையே, தலைமை நீதிபதியை மாற்றியதற்கு தமிழக வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை ஐகோர்ட் முன்பாக நாளை(செப்.9) காலை, மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் தலைமையில் வக்கீல்கள் போராட்டம் நடத்துகின்றனர். மேலும், சென்னை ஐகோர்ட் வக்கீ்ல்கள் சங்கம், மதுரை ஐகோர்ட் கிளை வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவை நாளை அவசரப் பொதுக் குழுவை கூட்டியுள்ளன. இதில் தலைமை நீதிபதியை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதுடன், மாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இதற்கிடையே, தலைமை நீதிபதியின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படாத நிலையில், ஐகோர்ட் முதல் பெஞ்சில் தலைமை நீதிபதி தஹில் ரமானியும், நீதிபதி எம்.துரைசாமியும் நாளை வழக்கம் போல் வழக்குகளை விசாரிப்பார்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனாலும், ராஜினாமா கடிதம் அனுப்பிய பின்பு தலைமை நீதிபதி தஹில்ரமானி, வழக்குகளை விசாரிப்பாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில், தமது ராஜினாமா முடிவை முதன்முதலில் வெளிப்படுத்திய தலைமை நீதிபதி தஹில் ரமானி, தமிழர்கள் மற்றும் தமிழ்நாடு மாநிலமும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று உருக்கமாக கூறியுள்ளார்.