பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி மரணம்

முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான ராம்ஜெத் மலானி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 96.

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, கடந்த 2 வாரங்களுக்கு மேல் உடல்நலக்குறைவால் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார். நேற்றிரவு முதல் அவரது நிலை கவலைக்கிடமானது. இந்நிலையில், இன்று காலையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அவர் மரணம் அடைந்தார்.

ஜெத்மலானியின் மகன் மகேஷ் ஜெத்மலானி வழக்கறிஞர். மகள் ராணி ஜெத்மலானி, அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஜெத்மலானி இப்போது பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் சிகார்பூரி்ல் 1923 செப்டம்பர் 14ம் தேதி பிறந்தவர். சிறுவயதிலேயே சிறந்த அறிவாளியாக விளங்கிய ஜெத்மலானி தனது 13வயதில் மெட்ரிகுலேசன் படித்து முடித்தார். 17வது வயதில் எல்.எல்.பி. என்ற சட்டப்படிப்பை முடித்தார். அந்த காலத்தில் 21 வயது நிரம்பினால் மட்டுமே வக்கீலாக பதிவு செய்ய முடியும். ஆனாலும், இவருக்காக பார்கவுன்சிலில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி 18 வயதில் வக்கீலாக பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டார்.

மிகச் சிறந்த வழக்கறிஞராக திகழ்ந்த ஜெத்மலானி, பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதாடியிருக்கிறார். பெரிய குற்றவழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜராகி பல வழக்குகளில் வெற்றி கண்டிருக்கிறார். ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகள், பங்குச்சந்தை மோசடி மன்னன் அர்ஷத்மேத்தா, தீவிரவாதி அப்சல் குரு, உள்பட பலருக்காக வாதாடியிருக்கிறார். தமிழகத்தில் சாமியார் பிரேமானந்தாவுக்காக கீரனூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியவர்.

ஜெத்மலானி இரண்டு முறை மும்பை தொகுதியில் வென்று எம்பியாக இருந்துள்ளார். வாஜ்பாய் ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தார். இதன்பின், 2004ல் லக்னோ தொகுதியில் வாஜ்பாயை எதிர்த்தே போட்டியிட்டார். எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குபவர் ஜெத்மலானி. எல்லா அரசியல் தலைவர்களையும் காரசாரமாக தாக்கிப் பேசுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>