கவர்னர் தமிழிசைக்கு முதல் நாளிலேயே பணி.. 6 அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம்
தெலங்கானா கவர்னராக பதவியேற்ற சில மணி நேரத்திலேயே டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு பணி தொடங்கி விட்டது. 6 புதிய அமைச்சர்களுக்கு அவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின்பு, முதல் சட்டமன்றத் தேர்தலில் டி.ஆர்.எஸ் கட்சி வெற்றி பெற்றது. கே.சந்திரசேகர ராவ் முதல்வராக பதவியேற்றார். 2வது தேர்தலிலும் இந்த கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. முதல் கட்டமாக சந்திரசேகரராவுடன் 10 அமைச்சர்கள் பதவியேற்றிருந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்திரராஜன், அம்மாநில கவர்னராக செப்.8ம் தேதி காலையில் பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து, மாலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 6 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். சந்திரசேகரராவின் மகன் கே.டி.ராமாராவ், உறவினர் ஹரீஷ் ராவ், சபீதா இந்திரா ரெட்டி, கங்குலா கமலாகர், அஜய்குமார், சத்யவதி ரதோட் ஆகிய 6 புதிய அமைச்சர்களுக்கும் கவர்னர் தமிழிசை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கவர்னராக பதவியேற்ற சில மணி நேரத்திலேயே முதல் பணியாக அமைச்சர்களுக்கு தமிழிசை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இவர்களில் சபீதா இந்திரா ரெட்டி, காங்கிரசில் இருந்து டி.ஆர்.எஸ்.கட்சிக்கு வந்தவர். காங்கிரஸ் ஆட்சியின் போது உள்துறை அமைச்சராக இருந்தவர். கே.சி.ஆரின் மகன் கே.டி.ராமாராவுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறையே இம்முறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஹரீஷ்ராவுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.