கனடாவில் டோரியன் புயல் அட்டகாசம் – 4.5 லட்சம் வீடுகளுக்கு பவர் கட்
கரீபியன் தீவுக்கு அருகே கடலில் உருவான டோரியன் புயல் கனடா நாட்டை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டு சென்றுள்ளது. இதனால், அங்கு, 4.5 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அந்த பகுதியே இருளில் மூழ்கியுள்ளது.
அட்லாண்டிக்கில் அமைந்துள்ள பஹாமஸ் தீவினை அடித்து நொறுக்கிவிட்டு, அப்படியே கனடா நாட்டு பக்கமும் ஒரு காட்டு காட்டியுள்ளது டோரியன் புயல். மிகவும் பலம் வாய்ந்த இந்த புயல் தாக்குதல் காரணமாக கனடா நாட்டில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
டோரியன் புயலின் கோர பசிக்கு பஹாமஸில் சுமார் 43 பேர் பலியாகினர். இந்நிலையில், கனடாவில் சுமார் 160கி.மீ., வேகத்தில் டோரியன் புயல் தாக்கியது.
இந்த கோர தாக்குதலால், ஆயிரக்கணக்கான மரங்கள் தூக்கி விசப்பட்டன. சாலையில் இருந்த மின்கம்பங்கள் சரிந்து விழுந்து பல்வேறு இடங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 4.5 லட்சம் வீடுகளுக்கு இதனால், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு, அந்நகரமே இருளில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புயல் தாக்கிய சில மணி நேரத்தில் மட்டும் 100 மில்லிமீட்டர் அளவு மழை பெய்ததாக கனடா வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன்காரணமாக ஹெலிபேக்ஸ் நகரில் பல்வேறு இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. எனினும் டோரியன் புயலால் கனடாவில் உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ அல்லது யாரும் காயம் அடைந்ததாகவோ இதுவரை தகவல்கள் இல்லை என்பது சற்றே ஆறுதலான விஷயம்.