அமமுகவில் அடுத்த விக்கெட்.. கட்சி தாவும் பெங்களூரு புகழேந்தி?
டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அடுத்த விக்கெட் விழுகிறது. தினகரனுக்கு நெருக்கமாக விளங்கிய பெங்களூரு புகழேந்தி, விரைவில் கட்சி தாவுகிறார் என்பதை அவரே பேசும் வீடியோ வெளிப்படுத்தியுள்ளது.
அதிமுக அணிகள் மீண்டும் இணைந்த போது, 18 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் டி.டி.வி.தினகரன் பின்னால் அணிவகுத்து நின்றனர். எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்த ஓ.பன்னீர்செல்வம், துணை முதல்வர் பதவியை வாங்கியதும் அடங்கிப் போனார். அவரது ஆட்களும் முடிந்த அளவுக்கு அதிமுகவில் சாதித்து கொண்டு, எடப்பாடிக்கு அடிபணிந்தனர். இந்த சூழலில், 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டது. அதை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதே போல், மத்திய, மாநில அரசுகளின் நெருக்கடிகள் மற்றும் பல்வேறு சட்டப்பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் தினகரன், ‘அ.ம.மு.க.’ என்ற புதிய கட்சியைத் துவக்கினார். இதற்கிடையே, இந்த கட்சி போனியாகுமா, அரசியல் எதிர்காலம் என்னவாகுமோ என்று பயந்த செந்தில் பாலாஜி, கலைராஜன், தங்கத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் தி.மு.க.வுக்கும், இசக்கி சுப்பையா அதிமுகவுக்கும் தாவினர்.
இவர்களைத் தவிர, வெற்றிவேல், பழனியப்பன், பெங்களூரு புகழேந்தி ஆகியோர் மட்டுமே முக்கிய தளகர்த்தாக்களாக தினகரன் பின்னால் இருந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக பெரும் தோல்வியைச் சந்திக்கவே இவர்களும் மாற்றி யோசிக்கத் தொடங்கி விட்டனர்.
இவர்களில் பெங்களூரு புகழேந்தி விரைவில் அதிமுகவுக்கு தாவப் போவதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன. ஆனாலும், அதை அமமுக மறுத்து வந்தது. தற்போது புகழேந்தியே தினகரனை விமர்சித்து பேசும் ஆடியோ ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் விரைவில் தனது ஆதரவாளர்களுடன் புகழேந்தி இடம் மாறப் போவது தெரிகிறது.
கடந்த வாரம் புகழேந்தி, கோவைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு ஓட்டல் அறையில் தங்கியிருக்கிறார். அறையை காலி செய்வதற்கு பெட்டிகளை ரெடி செய்த போது, அவரை சந்திக்க அமமுக கட்சியினர் ஐந்தாறு பேர் வருகிறார்கள். அவர்களுடன் புகழேந்தி பேசும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. அதில் ஒரு பெண், தன்னை இணைச் செயலாளர் என்று சொல்கிறார். அப்போது ஒருவர், ‘‘உங்க கிட்ட ஐந்து நிமிஷம் பேசிவிட்டு போகத்தான் வந்தோம். நாங்க கட்சிக்காக உழைக்கறதுக்கு தயாராக இருக்கிறோம்...’’ என்று பேசுகிறார்.
அப்போது குறுக்கிட்ட புகழேந்தி, ‘‘தப்பா எதுவும் நினைக்காதீங்க. போகுற இடத்துலயும் இருக்கிற இடத்துலயும் நமக்கு முகாந்திரம் இல்லாமல் இருக்கக் கூடாது. நமக்கான சரியான பொசிஷனையும், ஃப்யூச்சரையும் சரி பண்ணிட்டுதான் போகணும். அந்த ஐடியாவோடதான் இருக்கிறேன். என்னோட லிஸ்ட்ல உங்களையும் சேர்த்துகிறேன். இங்கயும்(அமமுக) எனக்கு யார் கிட்டயும் போய் நிக்க நேரம் இல்ல...
அட்ரஸ் இல்லாம 14 வருஷம் வெளியில் இருந்த தினகரனை ஊருக்கு காமிச்சது இந்த புகழேந்திதான். போராட்டம் எல்லாம் பண்ணி கொண்டு வந்தோம். உண்மையைச் சொல்லணும்னா அம்மா சாகறப்பக் கூட அவரு கிடையாது. அதனாலதான் சொல்றேன். யோசனை பண்ணி ஒரு முடிவுக்கு வருவோம். நான் அப்பறம் உங்ககிட்ட பேசுகிறேன்’’ என்று அவர்களுக்கு புகழேந்தி ஆறுதல் கூறுவதாக முடிகிறது அந்த வீடியோ.
இது பற்றி அமமுகவினரிடம் விசாரித்த போது, ‘‘புகழேந்தியும் கவலையில்தான் இருக்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும் போது சம்பாதிக்க முடியாது. நிறைய இழப்புகள் வரும். அதை தாங்கிக் கொள்ளுபவர்கள்தான் தலைவராக முடியும். புகழேந்தியை சந்தித்தவர்கள் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். அவர்கள் திமுக பிரமுகர் ஒருவரின் இல்லத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு போயிருந்தனர். அப்போது திமுகவில் சேருவதற்கு அவர்கள் பேசியிருந்தனர். இது தெரிந்ததால் அவர்கள், அமமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்’’என்றனர்.
எனவே, அமமுகவில் அடுத்த விக்கெட் விழுவது உறுதியாகி விட்டது. பெங்களூரு புகழேந்தி தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவுக்கு செல்வார் என்றும், நாளை(செப்.10) அமெரிக்காவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி திரும்பி வந்ததும் அவரது இணைப்பு விழா நடக்கும் என்றும் கூறப்படுகிறது.