தலைமை நீதிபதி மாற்றத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தில் வக்கீல்கள் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு
தலைமை நீதிபதி மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளன.
இந்தியாவில் உள்ள ஐகோர்ட் தலைமை நீதிபதிகளில் மூத்த நீதிபதி, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி. இவரை மேகாலயா ஐகோர்ட்டுக்கும், அங்குள்ள தலைமை நீதிபதி மிட்டலை சென்னை ஐகோர்ட்டுக்கும் பணியிட மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது.
சார்ட்டர்டு ஐகோர்ட்டான சென்னை ஐகோர்ட்டில் இருந்து மிகச் சிறிய ஐகோர்ட்டான மேகாலயா ஐகோர்ட்டுக்கு தன்னை மாற்றுவதை தஹில் ரமானி, அவமானமாக கருதினார். தன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், இப்படி மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாறுதல் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு கொலிஜியத்திற்கு வேண்டுகோள் அனுப்பினார். ஆனால், அதை சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் நிராகரித்தது. இதையடுத்து, தஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்து, ஜனாதிபதிக்கும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அவரது ராஜினாமாவை சுப்ரீம் கோர்ட் இன்னும் ஏற்கவில்லை.
இந்நிலையில், இன்று தலைமைநீதிபதி தஹில் ரமானி, நீதிமன்ற விசாரணைக்கு அமரவில்லை. இதனால், ஐகோர்ட் முதல் பெஞ்ச் இன்று செயல்படவில்லை. அங்கு பட்டியலிடப்பட்டிருந்த 75 வழக்குகள் வேறு அமர்வுகளுக்கு மாற்றப்பட்டதாக பதிவாளர் ஜெனரல் அலுவலகம், காலை 10.30 மணிக்கு தெரிவித்தது. தலைமை நீதிபதியுடன் முதல் அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி துரைசாமி, தனியாக அமர்ந்து வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்.
இதற்கிடையே, தலைமை நீதிபதியை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து, சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூடி விவாதித்தது. அதில், நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. மேலும், தலைமை நீதிபதி பணி மாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படது.
இதே போல், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளன.