வாகன விற்பனை கடும் வீழ்ச்சி.. ஆகஸ்ட்டில் மந்தமான சூழல்..

ஆட்டோமொபைல் தொழில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் வாகன விற்பனை முந்தைய ஆண்டை விட 31 சதவீதம் சரிந்து விட்டது. இதனால், முக்கிய ஆலைகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.

நாட்டின் பொருளாதாரம் கடும் பாதிப்படைந்துள்ளது. இதனால், உள்நாட்டு உற்பத்தி விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெறும் 5 சதவீதமாக சரிந்துள்ளது. குறிப்பாக, ஆட்டோமொபைல் தொழில் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் வாகன விற்பனை அதிகரித்து கொண்டே செல்லும்.

ஆனால், இப்போது விற்பனை குறைந்து கொண்டே போகிறது. கடந்த மாதத்தில்(ஆகஸ்ட்) பயணியர் வாகனங்கள் விற்பனை, முந்தைய ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட 31.57 சதவீதம் குறைந்துள்ளது. ஆகஸ்ட்டில் ஒரு லட்சத்து 96524 பயணியர் வாகனங்களே விற்பனையாகியுள்ளது. அதே போல், கார் விற்பனை 41.09 சதவீதம் குறைந்து ஒரு லட்சத்து 15,957 வாகனங்களே விற்பனையாகியுள்ளது. இருசக்கர வாகனங்கள் விற்பனையும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 1996-97ம் ஆண்டிற்கு பின்பு, இப்படியொரு விற்பனை சரிவு ஏற்பட்டதே இல்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, மாருதி சுசுகி நிறுவனம், குருகிராமில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தியிருக்கிறது. இதேபோல், சென்னை எண்ணூரில் உள்ள அசோக் லேலன்ட் இந்த மாதம் 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துகிறது. ஓசோர் நிறுவனத்தில் 1, 2வது பிரிவுகள் மூடப்படுகிறது. பல்வேறு ஆட்ேடாமொபைல் தொழிற்சாலைகளும் உற்பத்தியை குறைத்து வருகின்றன.

எனினும், அடுத்த மாதம்(அக்டோபர்) முதல் பண்டிகைக்காலம் துவங்குவதால், வாகன விற்பனை மீண்டும் சூடுபிடிக்கும் என்று இந்த தொழிலில் உள்ளவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

More News >>