துபாயில் 6 நிறுவனங்களுடன் தமிழ்நாடு தொழில் ஒப்பந்தம்.. ரூ.3,750 கோடி முதலீடு
துபாயில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் 6 தொழில் நிறுவனங்களுடன் ரூ.3750 கோடி முதலீடு செய்யும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த புதிய தொழில்களின் மூலம் தமிழகத்தில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மாதம் 28ம் தேதி, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் தொடங்கினார். அந்த நாடுகளில் பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதைத் தொடர்ந்து, நேற்று(செப்.9) முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துபாய்க்கு சென்றார். அங்கு ஐக்கிய அரபு அமீரக அரசின் கீழ் இயங்கும் வர்த்தகர்கள் கூட்டமைப்பின் சார்பில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் முதல்வர் கலந்து கொண்டு தமிழகத்தில் தொழில் துவங்க வருமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
முன்னதாக, தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளால், அங்கு 6 தொழில் நிறுவனங்களுடன் ரூ.3750 கோடி முதலீடு செய்யும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. ஐ-டெக் நிறுவனம், ஜெயன்ட் நிறுவனம், முல்க் ஹோல்டிங்ஸ், புரோ குளோபல் லாஜிஸ்டிக்ஸ், பிரைம் மெடிக்கல், எம் ஆட்டோ ஆகிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. மேலும், துபாய் துறைமுக கழகமும் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தங்களின்படி தமிழகத்தில் தொழில் தொடங்கப்பட்டால் 10 ஆயிரத்து 800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் முதல்வர் சுற்றுப்பயணத்தின் போது போடப்பட்ட ஒப்பந்தங்களையும் சேர்த்தால், மொத்தம் ரூ.9,280 கோடி மதிப்பிலான முதலீடுகள் தமிழகத்திற்கு வரவுள்ளது.