கோவையில் வழிப்பறி திருடர்களின் அட்டூழியம்
கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தென்னம்பாளையம், அரசூர், சங்கோதிபாளையம், கொள்ளுப்பாளையம் பகுதிகளில், இரவு நேரங்களில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.
இந்த பகுதிகளில், பணியாளர்கள் மூன்று ஷிப்டுகளாக மாறி மாறி பணிபுரியும் தனியார் நிறுவனங்கள் பல அமைந்துள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி என தமிழகத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் இங்குள்ள நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பலர் அதன் சுற்றுவட்டாரத்தில், ஒருசில கிலோமீட்டர் தொலைவில், குடும்பமாக அல்லது பேச்சுலராக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி அந்நிறுவனங்களில் பணி புரிந்து வருகிறார்கள். அவர்கள் இரவு நேர ஷிப்டுக்கு செல்லும் நாட்களில், நடுஇரவில் தனியாக பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது, இருசக்கர வாகனத்திலோ, மிதிவண்டியிலோ, அல்லது நடந்தோ பணிக்கு செல்கிறார்கள்.
அப்படி தனியாக செல்லும் பாவப்பட்ட அப்பாவி இளைஞர்களை குறிவைத்து ஒரு வழிப்பறி திருடர் கூட்டம் இப்பகுதியில் சுதந்திரகாக இயங்கி வருகிறது. ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட சிறு கும்பலாக சேர்ந்து, அந்த பகுதிகளில் பல வழிப்பறி திருட்டுக்களை நடத்தி வருகிறார்கள். அதிவேகமாக செல்லக்கூடிய இரண்டு இருசக்கர வாகனங்கள் தான் இவர்களது முதலீடு, இரவு பதினோரு மணிக்கு மேல் தனியாக நடந்து செல்பவர்களை துரத்தி செல்கிறார்கள், பணம் கேட்டு மிரட்டுகிறார்கள், எதிர்த்து பேசினால் அடித்து உதைத்து, கையில் கழுத்தில் கிடப்பதை எல்லாம் அபகரித்துக்கொண்டு பறந்துவிடுகிறார்கள்.
அரசூரில் வாடகை வீட்டில் தங்கிக்கொண்டு, சங்கோதிபாளையத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் திருநெல்வேலியை சேர்ந்த (பெயர் வெளியிட விரும்பாத) ஒரு பேச்சுலர் இளைஞன். வயது 25, இவர் இரவு 11:45 மணியளவில், தனது நிறுவனத்திற்கு அன்னூர் ரோடு வழியாக, இரவு நேர பணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வந்து இவரை வழி மறித்துள்ளது. அதில் வந்த ஆறு இளைஞர்கள், இவரிடம் பெட்ரோல் போட பணம் தருமாறு கேட்டுள்ளனர், இவர் பணம் இல்லை என சொல்ல, ஆறு பேரும் இவரை அடித்து காயப்படுத்தி, இவரிடமிருந்த பனிரெண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள செல் போனையும் அபகரித்துக் கொண்டு வந்த வழியே பறந்துவிட்டனர்.
உடல் வலியையும் மனவேதனையையும் தன்னில் அடக்கியவராய் அந்த இளைஞன் இரவு பணிக்கு வந்து சேருகிறார். நல்லவேளை தங்கத்தில் எதுவும் அணியவில்லை. அணிந்திருந்தால் இந்த அடிதடி சம்பவம் கொலையில் முடிந்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
இதைபற்றி பகலில் அந்த பகுதியில் உள்ள கடைகளில் விசாரித்தபோது, இரவில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தற்போது வாடிக்கையாகி விட்டதாக அவர்கள் பயத்துடன் கூறுகிறார்கள். ஆரம்பத்தில் இப்பகுதியில் வாழும் வட இந்திய இளைஞர்களை மட்டுமே குறிவைத்து திருடியவர்கள், இன்று எந்த பேதமும் இல்லாமல் கைவரிசை காட்டி வருகிறார்கள் என ஒரு முதியவர் சொல்லியபோது, 'கோவையிலுமா இப்படி' என நொந்துகொள்ள வைக்கிறது.
மேலும், விசாரித்த வரையில் பல இளைஞர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஐந்து திருடர்களைக் கொண்ட ஒரு கும்பல் தொடர்ந்து இரண்டு நாட்களாக தன்னை விரட்டி வந்ததாகவும், வேறொரு நிறுவனத்திற்குள் சென்று மறைந்து தன்னை காத்துக்கொண்டதாகவும் ஒரு இளைஞர் கூறுகிறார். இன்று பாதுகாப்புக்காக ஒரு கத்தியுடன் வந்துள்ளதாக அவர் கூறியது எனது இதயத்துடிப்பை கொஞ்சம் அதிகமாக்கியது.
இதுபோன்ற புகார்களுடன் தனிப்பட்ட முறையில் காவல் நிலையத்திற்கு சென்றால் நம்மையே திருடனாக கருதி விசாரிப்பார்கள் என்ற சளிப்பில் யாரும் காவல்நிலையம் செல்ல துணிவதில்லை. தான் பணிபுரியும் நிறுவனத்தில் புகார் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். தனியார் நிறுவனங்கள் சார்பில் காவல்துறையிடம் பல முறை புகார் கொடுக்கப்பட்டும், காவல்துறை ரோந்துபணியில் கூட ஈடுபடுவது போல் தெரியவில்லை. இது தின்று கொழுத்த வழிப்பறி திருடர்கள்களுக்கு இன்னும் தைரியத்தை கொடுப்பதாகவே உள்ளது.
தனிமனிதன் தன்னை தற்காத்துக் கொள்ள ஆயுதங்கள் ஏந்த வேண்டிய சூழலை இந்த சமூகம் உருவாக்கி விட்டுள்ளது. ஆண்களுக்கே இந்த நிலை என்றால், பெண்களின் பாதுகாப்பை என்னால் எண்ணிப்பார்க்க இயலவில்லை. கொலை சம்பவங்கள், கோடிக்கணக்கில் கொள்ளை சம்பவங்கள் நடந்தால் மட்டுமே இந்நாட்டில் சிசிடிவி கேமரா பதிவுகள் காவல்துறையால் சோதனை செய்யப்படுகிறது. இதுபோன்ற வழிப்பறி திருட்டுகளுக்கும் சிசிடிவி கேமராக்களின் துணையை காவல்துறை நாடி திருடர்கள்களை பிடித்தால், உழைக்கும் பெருமக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.
இதை ஒரு செய்தியாக வாசித்து, நமக்கென்னவென்று கடந்து செல்பவர்கள் கவனத்திற்கு... நாளை நானும் நீங்களும் அதே சாலையிலோ, அல்லது அந்த வழிப்பறி கும்பல் நாம் செல்லும் சாலையிலோ வராத வரை... நமக்கு எந்த பிரச்சனை இல்லை. இதுபோன்ற மனசாட்சி இல்லாத வழிப்பறி திருடர்களிடமிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள விரும்பி, இதனை இங்கே பதிவு செய்கிறேன். இதுவே கடைசியாக இருக்குமென்ற நம்பிக்கையில்... உங்களில் ஒருவன்.