பிரிட்டன் பார்லிமென்ட் அக்.14 வரை சஸ்பென்ட்.. பிரதமர் ஜான்சனுக்கு எதிர்ப்பு

பிரிட்டன் பார்லிமென்டில் பிரக்சிட் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல், பார்லிமென்ட்டை அக்டோபர் 14ம் தேதி வரை சஸ்பென்ட் செய்துள்ளது ஜான்சன் அரசு.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலக வேண்டுமென்று பெரும்பான்மை மக்கள் வாக்களித்தனர். அதைத் தொடர்ந்து, பிரிட்டனுக்கு சாதகமான அம்சங்களுடன் ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்து விட்டு, வெளியேற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

வெளியேறுவதற்கான ‘பிரக்சிட்’ தீர்மானத்தை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாமல், ஆளும் கன்சர்வேடிவ் கட்சிப் பிரதமர் தெரசா மே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதவி விலகினார். அதைத் தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சியில் நடந்த தேர்தலின் மூலம் போரிஸ் ஜான்சன் தேர்வாகி பிரதமரானார். அவராலும் இது வரை நாடாளுமன்றத்தில் பிரக்சிட் தீர்மானத்ைத நிறைவேற்ற முடியவில்லை.

இந்நிலையில், அக்டோபர் 31ம் தேதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்குள் பிரக்சிட் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். கடந்த செப்.3ம் தேதியன்று நாடாளுமன்றம் கூட்டத் தொடர் தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே 21 கன்சர்வேடிவ் எம்.பி.க்கள், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியுடன் சேர்ந்து கொண்டு பிரக்சிட் தீர்மானத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய கூட்டம் இரவு வெகுநேரம் வரை நீடித்தது. இதில், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கான பிரக்சிட் தீர்மானத்தை ஜான்சன் அரசு கொண்டு வந்தது. ஆனால், அதை ஆளும் கட்சியின் 21 எம்.பி.க்களும், எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து தோற்கடித்து விட்டனர். இந்நிலையில், தேர்தல் நடத்தலாம் என்ற ஜான்சனின் தீர்மானத்தையும் தோற்கடித்தனர். நேற்றிரவு அரசின் 3 தீர்மானங்கள் வரிசையாக தோற்கடிக்கப்பட்டதால், நாடாளுமன்றத்தை அக்டோபர் 14ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்ய ஜான்சன் அரசு பரிந்துரைத்தது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டத் தொடர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதற்கு சபாநாயகர் ஜான் பெர்கோவ் அதிருப்தி தெரிவித்தார்.

More News >>