தலைமை நீதிபதி மாற்றத்திற்கு எதிர்ப்பு : ஒரு லட்சம் வக்கீல்கள் போராட்டம்.. ஜனாதிபதியிடம் மனு அளிக்க முடிவு

தலைமை நீதிபதி தஹில் ரமானியை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் ஒரு லட்சம் வக்கீல்கள், நீதிமன்றங்களை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகாலயா ஐகோர்ட்டுக்கும், அங்குள்ள தலைமை நீதிபதி மிட்டலை சென்னை ஐகோர்ட்டுக்கும் பணியிட மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது.

சார்ட்டர்டு ஐகோர்ட்டான சென்னை ஐகோர்ட்டில் இருந்து மிகச் சிறிய ஐகோர்ட்டான மேகாலயா ஐகோர்ட்டுக்கு தன்னை மாற்றுவதை தஹில் ரமானி, அவமானமாக கருதினார். தன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், இப்படி மாற்றக் கூடாது என்று குறிப்பிட்டு, மாறுதல் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு கொலிஜியத்திற்கு வேண்டுகோள் அனுப்பினார். ஆனால், அதை சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் நிராகரித்தது. இதையடுத்து, தஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்து, ஜனாதிபதிக்கும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அவரது ராஜினாமாவை சுப்ரீம் கோர்ட் ஏற்றதா என தெரியவில்லை.

இதற்கிடையே, இப்பிரச்னை குறித்து சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூடி விவாதித்தது. அதில், ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, இன்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள், நீதிமன்றங்களை புறக்கணித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். கொலிஜியத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தலைமை நீதிபதி மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் கூறுகையில், ‘‘தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் வக்கீல்கள், நீதிமன்றப் புறக்கணிப்பு செய்துள்ளனர். தலைமை நீதிபதி மாற்றத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி, ஜனாதிபதியிடமும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடமும் மனு அளிக்க முடிவு செய்திருக்கிறோம்’’ என்றார்.

More News >>