ராஜஸ்தான் டிரைவருக்கு ஒன்றரை லட்சம் அபராதம் : போட்டி போடும் அதிகாரிகள்

டெல்லியில் ராஜஸ்தான் மாநில டிரக் டிரைவர் மற்றும் உரிமையாளரிடம் போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் ரூ.1.41 லட்சம் அபராதம் விதித்து அதிகாரிகள் ‘சாதனை’ படைத்துள்ளனர். புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்தது முதல் யார் அதிக அபராதம் வசூலிப்பது என்று ஒவ்வொரு மாநில அதிகாரிகளும் போட்டி போட்டு வருகிறார்கள்.

நாடு முழுவதும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை சரியாக கடைபிடிப்பதில்லை. அதனால்தான், அதிகமான விபத்துகள் ஏற்படுகின்றன என்று மத்திய அரசு கருதியது. இதையடுத்து, போக்குவரத்து விதிமீறல்களுக்கு ரூ.1000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கும் வகையில், மோட்டார் வாகனப் போக்குவரத்து சட்டத்தில் புதிய திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம், செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து, டெல்லியை அடுத்துள்ள குருகிராமில் தினஷே் மதன் என்பவர் ஹெல்மெட் அணியாததுடன், டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் எதுவும் இல்லாமல் சென்றதால், அவருக்கு டெல்லி போலீசார் ரூ.23 ஆயிரம் அபராதம் விதித்தனர். தமிழகத்தின் தூத்துக்குடியில் ஒருவருக்கு ரூ.16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இந்நிலையில், தற்போது இதையும் தாண்டி டெல்லியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சரக்கு லாரி டிரைவர் மற்றும் அதன் உரிமையாளரிடம் போக்குவரத்து அதிகாரிகள் ஒரு லட்சத்து 41,600 ரூபாய் அபராதம் வசூலித்து சாதனை புரிந்துள்ளனர்.

ராஜஸ்தானில் பிகானீரைச் சேர்ந்த ஹர்மன் ராம்பாம்பு என்பவரின் சரக்கு லாரியில் சிலிகா ஏற்றிக் கொண்டு, டிரைவர் வண்டியை ஓட்டிச் சென்றார். டெல்லியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவரிடம் ஆர்சி புக், பெர்மிட் போன்றவை இல்லை. அது மட்டுமல்லாமல், வண்டியில் ஓவர்லோடாக சரக்கு ஏற்றியிருந்தனர். இதையடுத்து, மொத்தம் ரூ.1.41 லட்சம் அபராதத்தை போக்குவரத்து அதிகாரிகள் விதித்தனர்.

இது பற்றி ஹர்மன் கூறுகையில், ‘‘ஓவர்லோடு என்று முதல் டன்னுக்கு ரூ.20 ஆயிரமும், அடுத்தடுத்த டன்னுக்கு ரூ.2000 வீதம் ஓவர்லோடுக்காக மட்டுமே ரூ48 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஆர்.சி இல்லாததற்கு ரூ.10 ஆயிரம், பெர்மிட் இல்லாததற்கு ரூ.10 ஆயிரம் என்று மொத்தமாக ரூ.70,800 டிரைவருக்கு அபராதம் விதித்தனர். பின்னர், அதே தொகையை எனக்கும் விதித்தனர். ஆக மொத்தம் ரூ.1.41 லட்சத்தை 5 நாட்களில் ஏற்பாடு செய்து கட்டினேன்’’ என்றார்.

More News >>