கர்நாடக முன்னாள் மந்திரி சிவக்குமாரின் மகளுக்கு அமலாக்கப்பிரிவு சம்மன்..
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. செப்.12ம் தேதியன்று, சிவக்குமாருடன் ஐஸ்வர்யாவிடமும் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.
கர்நாடக காங்கிரசில் முக்கியமானவர் டி.கே.சிவக்குமார். ஏற்கனவே சித்தராமையா முதல்வராக இருந்த போது அமைச்சராக இருந்தார். சிவக்குமார் பெரும் பணக்காரர். குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசின் அகமது படேலை தோற்கடிப்பதற்கு பாஜக முயன்ற போது, அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து தனது ரிசார்ட்டில் தங்க வைத்து, அகமது படேல் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தவர்.
சமீபத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் தீவிரம் காட்டிய போது, அதை முறியடிக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டவரும் இதே சிவக்குமார் தான். ஆனால் அவருடைய முயற்சிகள் பலிக்காமல், பாஜக ஆட்சிக்கு வந்து விட்டது. ஆனாலும் டி.கே.சிவக்குமாரை பழி தீர்க்க, அவர் மீது மத்திய அரசு குறி வைத்து வந்தது. ஏற்கனவே குஜராத் ராஜ்யசபா தேர்தலின் போதே சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி ரெய்டுகளை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர், சட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததாக குற்றம்சாட்டி, சிவக்குமாருக்கு அமலாக்கத் துறையினர் கடந்த வாரம் சம்மன் அனுப்பினர். டி.கே.சிவக்குமாரிடம் மாலை வரை விசாரணை நடத்தி விட்டு அவரை கைது செய்தனர்.
இந்நிலையில், சிவக்குமாரின் 22 வயது மகள் ஐஸ்வர்யாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதன்படி, அவர் நாளை(செப்.12) விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது சிவக்குமாரையும் உடனிருக்க வைத்து விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டில் டெல்லியில் சிவக்குமாருக்கு தொடர்புடைய 4 இடங்களில் வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்திய போது ரூ.8.5 கோடி ரொக்கப் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில், ஐஸ்வர்யா டிரஸ்டியாக உள்ள கல்வி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களும் அடங்கும். ஐஸ்வர்யா நிர்வகிக்கும் நிறுவனங்களின் கணக்குகளில் இருந்து சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபர் சித்தார்த்தாவின் நிறுவனங்களுக்கு ஆன்லைனில் ஏராளமான பணபரிமாற்றங்கள் நடந்துள்ளன.
இதில், ஹவாலா மோசடிகள் நடந்துள்ளதாக அமலாக்கத் துறையினர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரிக்கவே ஐஸ்வர்யாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். எம்.பி.ஏ. பட்டதாரியான ஐஸ்வர்யா, முழு நேர டிரஸ்டியாக கல்வி நிறுவனங்களில் இருப்பதால், விசாரணைக்கு பின்னர் அவரும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சிவக்குமார் கைது செய்யப்பட்ட போது, பெங்களூரு, மைசூரு பகுதிகளில் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.