சந்திரபாபுவுக்கு சிறை: ஆந்திராவில் பதற்றம்.. தெலுங்குதேசம் போராட்டம்

ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தெலுங்குதேசம் கட்சியினர் இன்று பெரிய போராட்டம் நடத்துகின்றனர். இதனால், சந்திரபாபு நாயுடுவும், அவரது மகனும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கு பதற்றம் நிலவுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. அக்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் முதல்வராக பொறுப்பேற்றார்.

இதைத் தொடர்ந்து, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது, அரசு செலவில் கட்டியிருந்த பங்களாவை விதிமீறல் கட்டடம் என்று கூறி ஜெகன் அரசு இடித்தது. தெலுங்குதேசம் கட்சியினர் மீது தாக்குதல்கள் நடந்தன. ஏற்கனவே அந்த கட்சியினர் ஆட்சியில் இருந்த போது நடத்திய அராஜகங்களுக்கு பதிலடி என்று சொல்லியே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இந்த தாக்குதலை நடத்துகின்றனர்.

இந்த சூழ்நிலையில், பலநாடு மாகாணத்தில் அரசைக் கண்டித்து, மிகப் பெரிய பேரணியை நடத்த தெலுங்குதேசம் கட்சி முடிவு செய்திருந்தது. அதன்படி, இன்று காலை குண்டூரில் இருந்து அட்மாக்கூர் வரை பேரணி தொடங்கியது. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவையும், அவரது மகன் நர.லோகேஷையும் போலீசார் வீட்டுக்காவலில் வைத்தனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர விடாமல், வீட்டுச்சிறையில் அடைத்தனர்.

இதை கேள்விப்பட்டு, தெலுங்குதேசம் கட்சித் தொண்டர்கள் அணி,அணியாக சந்திரபாபு நாயுடு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே, சந்திரபாபு நாயுடு காலை 8 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். இரவு 8 மணி வரை உண்ணாவிரதத்தை தொடர்வார் என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

More News >>