பரூக் அப்துல்லாவை விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டில் வைகோ மனு..

காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லாவை விடுதலை செய்யக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை வைகோ தாக்கல் செய்திருக்கிறார்.இது குறித்து, மதிமுக தலைமை நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் செப்டம்பர் 15ம் தேதியன்று அண்ணாவின் 111வது பிறந்த நாள் விழா மாநாடு, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது.

இம்மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கலந்து கொள்ள ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தார். தற்போது, காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால், பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அவர்கள் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை.

எனவே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை விடுதலை செய்யக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று தாக்கல் செய்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>