பொருளாதார வீழ்ச்சி தான் மோடி அரசின் 100நாள் சாதனை.. ஸ்டாலின் கடும் விமர்சனம்
இந்திய பொருளாதாரம் 5 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருப்பதுதான் மோடி அரசின் நூறு நாள் சாதனை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இம்மானுவேல் சேகரனின் 62வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி ெசலுத்தினார். அவருடன் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, நிருபர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்தியவர் இமானுவேல் சேகரன். அவரது 62-வது நினைவு தினத்தில் எனது அஞ்சலியை செலுத்தியுள்ளேன். இந்திய ராணுவத்தில் பணியாற்றிய அவர் 1950ம் ஆண்டு விடுதலை இயக்கத்தை நடத்தியவர் என்றார்.
இதையடுத்து அவரிடம் நிருபர்கள், மோடி அரசின் நூறு நாள் சாதனையாக எதை பார்க்கிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு அவர், இந்திய பொருளாதாரம் 5 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருப்பதுதான் மோடி அரசின் நூறு நாள் சாதனை என்று பதிலளித்தார்.