பொருளாதார சரிவில் இருந்து மீட்பதற்கான திட்டம் எங்கே? திகார் சிறையில் உள்ள ப.சி. கேள்வி
நான் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன். ஏழைமக்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார சரிவில் இருந்து மீட்பதற்கான திட்டம் எங்கே? என்று திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீடு வந்ததில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதாகி, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் முறைகேடு செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அதே சமயம், எப்.ஐ.பி.பி. வாரியத்தில் இடம்பெற்ற அதிகாரிகள் யார் மீதும் வழக்கு தொடரப்படவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவில், எனது சார்பில் குடும்பத்தினரை என் ட்விட்டரில் என் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடக் கூறியுள்ளேன். மேலும், ஒரு டஜன் அதிகாரிகள், ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி வழங்கியதில் முடிவெடுத்த போது உங்களை மட்டுமே கைது செய்திருக்கிறார்களே, கடைசியாக நீங்கள் கையெழுத்திட்டதால்தானா? என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். எனது பதில், எந்த அதிகாரியும் தப்பு செய்யவில்லை. ஒருவரையும் கைது செய்யக் கூடாது என்பதுதான் என் நிலை என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் நேற்று(செப்.12) ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், நான் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன். ஏழைமக்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த வருமானம், குறைந்த வேலைவாய்ப்பு, குறைந்த வர்த்தகம், குறைந்த முதலீடுகள் எல்லாமே ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கிறது. இந்த பொருளாதாரச் சரிவில் இருந்து மீட்பதற்கான திட்டம் எங்கே? எப்போது அது வரும்? என்று கேட்டுள்ளார்.