தலையை வெட்டி விடுவேன்.. ஹரியானா முதல்வர் கோபம்

பாஜக பேரணியில் ஹரியானா முதல்வர் கலந்து கொண்ட போது, தனது தலையில் கீரிடம் வைக்க முயன்ற தொண்டரிடம், உன் தலையை வெட்டி விடுவேன் என்று கையில் கோடாரியுடன் சொல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. இதை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் ட்விட்டரில் போட்டுள்ளார்.

ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நடந்த பாஜக பேரணியில், ஒரு திறந்த வேனில் நின்றபடியே முதல்வர் கட்டார் சென்றார். அப்போது அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த கட்சி நிர்வாகி ஒருவர், அவரிடம் ஒரு சிறிய கோடாரியை கொடுத்தார். (பாஜகவினர் பெரும்பாலும் பேரணிகளில் சிறிய வேல், ஈட்டி, கோடாரி போன்ற ஆயுதங்களை கையில் வைத்திருப்பதை சமீப கால நிகழ்வுகளில் பார்க்கலாம்)

முதல்வர் கட்டார், அந்த கோடாரியை தூக்கி காட்டியபடி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் இருந்த தொண்டர் அவரது தலையில் வெள்ளிக் கிரீடம் சூட்ட முயன்றார். அதாவது, கோடாரி, கிரீடம் சகிதம் அவரை மகிழ்விக்க வேண்டும் என்பதுதான். ஆனால், கிரீடம் சூட்டும் போது அதை இடையூறாக பார்த்த கட்டார், சடாரென திரும்பி அந்த தொண்டரிடம் கோடாரியைக் காட்டி, உன் தலையை வெட்டி விடுவேன்.. என்று கோபாமாக எச்சரித்தார்.

இந்த வீடியோவை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜித்வாலா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, கிண்டலடித்திருந்தார். இது குறித்து கட்டார் கூறுகையில், என் தலையில் வெள்ளி கிரீடம் சூட்ட கட்சித் தொண்டர் முயன்றார். நான் ஆட்சிக்கு வந்த பிறகு, இது மாதிரி கலாசாரத்தையே ஒழித்து விட்டேன்.(பிரதமர் மோடி செல்லும் இடங்களில் எல்லாம் பல்வேறு விதமான கிரீடங்கள் சூட்டப்படுவதை பலரும் பார்த்திருக்கலாம்) அதனால்தான் கோபம் வந்து சத்தம் போட்டேன், அதை அந்த தொண்டரே ஏற்றுக் கொண்டார் என்று விளக்கம் கொடுத்தார்.

இதற்கும் ரன்தீப் சுர்ஜிவாலா, உங்க கட்சித் தொண்டர் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், கோடாரியுடன் நீங்கள் எச்சரிப்பதை பார்க்கும் பொது மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்று கேட்டிருக்கிறார்.

More News >>