ஜெயலலிதா குறித்த பயோபிக்குகள் எடுத்தால் அவ்வளவுதான் – தீபக் ஜெயக்குமார் திடீர் எச்சரிக்கை
மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்த பயோபிக் படங்கள் எடுத்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தீபக் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தவுடன், அவரது பயோபிக்கை எடுக்க பல இயக்குநர்கள் தைரியமாக முன் வந்துள்ளனர். இயக்குநர் ஏ.எல். விஜய் தலைவி என்ற டைட்டிலில் கங்கனா ரனாவத்தை வைத்து ஜெயலலிதா பயோபிக்கை உருவாக்கி வருகிறார்.
அவரை தொடர்ந்து மிஷ்கினின் உதவி இயக்குநரான பிரியங்கா என்பவர், தி அயர்ன் லேடி என்ற பெயரில், நித்யா மேனனை ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அவர் ஒரு பயோபிக் படத்தை எடுத்து வருகிறார்.
மேலும், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், ரம்யா கிருஷ்ணனை வைத்து குயின் எனும் வெப்சீரியஸையும் எடுத்து ரிலீஸ் செய்ய தயாராகி உள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் விஜய் மட்டும் தான் தங்களிடம் உரிய அனுமதி பெற்று ஜெயலலிதாவின் பயோபிக்கை எடுத்து வருவதாகவும், கெளதம் மேனன் உள்ளிட்ட சிலர், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை தங்களின் அனுமதியின்றி எடுத்து வருவதாக தங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அப்படி ஜெயலலிதா குறித்த படமோ பயோபிக்கோ எடுக்கும் பட்சத்தில் அவர்கள் கடுமையான விளைவுகளையும் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் சந்திக்க நேரிடும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
மேலும், கெளதம் மேனன் இயக்கியுள்ள குயின் வெப்சீரிஸ் யாரை மையப்படுத்தியது என்ற விளக்கத்தையும் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.