10 ஆண்டு சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.. தமிழ்நாடு முஸ்லீம் லீக் கோரிக்கை

அண்ணா பிறந்த நாளையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீ்க் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு முஸ்லிம் லீ்க் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அறிக்கை :

சிறைச்சாலை என்பது தண்டிக்கும் இடம் அல்ல; சீர்திருத்தும் இடம் என்ற கோட்பாட்டை உலகில் பல நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. சந்தர்ப்ப சூழ்நிலையால், நேர்ந்து விட்ட சம்பவத்தால், நீதிமன்றத் தீர்ப்பால் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்படும் கைதிகள், சிறைச்சாலையில் திருந்திய மனிதர்களாக மாறி முறையான வாழ்க்கை வாழத் துடிக்கிறார்கள்.

சிறைவாசிகள், அதிலும் ஆயுள் தண்டனை அடைந்தோர், பத்து ஆண்டுகள் தண்டிக்கப்பட்டோர், சில குற்றப் பிரிவுகளில் தண்டனை பெற்றதைக் காரணம் காட்டி விடுவிக்கப்படாமலேயே சிறையில் வாடுகின்றனர். பல சிறைவாசிகள் 15 ஆண்டுகள் கடந்தும், ஏன் 20 ஆண்டுகள் கடந்தும் சிறையில் இருக்கின்றனர். அவர்களது குடும்பங்கள் சின்னாபின்னமாகி, மரணத்தைவிடக் கொடுமையான மனத் துன்பங்களுக்கு சிறைவாசிகள் ஆளாகி உள்ளனர். ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்களை, மேலும் தண்டிப்பதைப் போல இந்த நடவடிக்கைகள் அமைகின்றன.

இஸ்லாமியர் என்றாலே தீவரவாதிகள், இந்தியாவிற்கு எதிரானவர்கள், பாகிஸ்தான் கைக்கூலிகள் என்ற படிமம் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பிறந்த நாளையொட்டி அவ்வபோது நீண்ட நாள் சிறைவாசிகளுக்கு முன்கூட்டியே விடுதலை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

சிறைச்சாலை என்பது தண்டிக்கும் இடம் அல்ல. எனவே, சிறைவாசத்தில் திருந்திய மனிதர்களுக்கு மறுவாழ்வு அளிக்கின்ற வகையில், செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி, இஸ்லாமிய சிறைவாசிகள் உட்பட 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போரையும், பரோல் விடுப்பில் ஒரு சில நாள்கள் தவறியவர்களையும் முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு முஸ்தபா கூறியுள்ளார்.

More News >>