விமான நிலைய அதிகாரியை தாக்கிய கனடா நாட்டுக்காரர்.. டெல்லியில் பரபரப்பு சம்பவம்
கனடா நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி, டெல்லி விமான நிலையத்தில் குடிபெயர்வு அதிகாரியை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெர்மனியில் உள்ள முனீச் நகரில் இருந்து கனடா நாட்டு சுற்றுலா பயணி ஒருவர், டெல்லிக்கு வந்தார். டெல்லி விமான நிலையத்தில் சர்வதேச பயணிகள், குடிபெயர்வு அதிகாரியிடம் (இமிகிரேஷன்) சான்று பெற்ற பின்புதான் வெளியே வர முடியும். கனடா பயணி அப்படி குடிபெயர்வு அதிகாரியிடம் சான்றிதழ் பெறச் சென்ற போது, அவர் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்யவில்லை.
இதையடுத்து, அவரிடம் அந்த அதிகாரி, உங்களுக்கு சர்வதேச விதிமுறைகள் தெரியாதா? என்று கோபமாக கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கனடா பயணி, அந்த அதிகாரியை அடிக்கத் தொடங்கினார். அதிகாரியை மோசமாக அவர் தாக்கவே, மற்றவர்கள் ஓடி வந்து அந்த கனடா பயணியைப் பிடித்தனர். இதன்பின், டெல்லி போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. போலீசாரிடம் குடிபெயர்வு துறை புகார் அளிக்கவே, அந்த கனடா பயணி மீண்டும் அவரது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
இதே போல், நேற்று(செப்.12) மதியம், துபாயில் இருந்து ஆர்.ஆர்.பாட்டியா என்பவர், டெல்லிக்கு வந்த போது அவரிடம் தொப்பியை கழற்றி விட்டு வெப் கேமராவுக்கு போஸ் கொடுக்குமாறு குடிபெயர்வு அதிகாரி கூறியுள்ளார். அவரும் அந்த அதிகாரியிடம் மோசமாக நடந்து கொண்டார். இதையடுத்து, அவர் மீது டெல்லி போலீசார், இபிகோ 186வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.