சந்திரயான் தொடர்பு துண்டானதற்கு மோடியின் பேட் லக் காரணமோ? குமாரசாமி கமென்ட்..

சந்திரயான்-2 திட்டத்தில் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பு துண்டானதற்கு மோடி கொண்டு பேட் லக் தான் காரணமாக இருக்கலாம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கமென்ட் அடித்துள்ளார்.

சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து, நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட லேண்டர் விக்ரம் சரியாக பிரித்து விடப்பட்டது. அதன் பிறகு, கடந்த 7ம் தேதியன்று லேண்டர், நிலவுக்கு 2.1 கி.மீ. தூரத்தில் இருந்த போது, நிலவின் மேற்பரப்பில் அதை இறக்குவதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் முயன்றனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டு அறையுடன் லேண்டரின் தொடர்பு துண்டாகி விட்டது. இதனால், விஞ்ஞானிகள் மிகவும் சோகமாகி விட்டனர். அப்போது, லேண்டர், நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரில் பார்வையிடுவதற்காக வந்திருந்த பிரதமர் மோடி, அவர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு சென்றார்.

இந்நிலையில், பெங்களூருவில் முன்னாள் முதல்வர் குமாரசாமி நேற்று நிருபர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடியை கிண்டலடித்தார். குமாரசாமி கூறுகையில், பிரதமர் மோடி ஏதோ தானே சந்திரயான் லேண்டரை நிலவில் இறக்குவது போல் காட்டிக் கொள்வதற்காக இஸ்ரோவுக்கு வந்தார். ஆனால், உண்மையில் சந்திரயான் 2 திட்டத்திற்கு 10, 12 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் உழைத்தனர். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும் 2008-09ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில்தான். ஒரு வேளை சந்திரயான்-2 திட்டத்தில் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பு துண்டானதற்கு மோடி கொண்டு பேட் லக் தான் காரணமாக இருக்கலாம் என்று குமாரசாமி கூறினார்.

More News >>