ஜார்கண்ட் சட்டசபை கட்டடம்.. மோடி திறந்து வைத்தார்..

ஜார்கண்ட் சட்டசபைக்கு ராஞ்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அவர் பேசுகையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முக்கியமான சட்டங்கள் இயற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜார்கண்ட் பயணம் மேற்கொண்டார். ராஞ்சியில் ஜெகன்னாதர் கோயிலுக்கு அருகே 39 ஏக்கரில் அம்மாநில சட்டசபைக்கு ரூ.465 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ஜார்கண்ட் மாநிலத்திற்கு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். இந்த மாநிலம் உருவாகி 19 ஆண்டுகள் முடிந்து இப்போதுதான் சட்டசபைக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இளைஞர்கள் இங்கு வந்து பார்வையிட வேண்டும்.

இந்த கட்டடத்தை வெறும் கட்டடமாக பார்க்கக் கூடாது. வருங்கால சமுதாயத்தை சிறப்பானதாக உருவாக்கும் இடமாக பார்க்க வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இரவு வரை கூட்டம் நடைபெற்றது. பல முக்கியமானச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றன. இதற்கு அனைத்து கட்சி எம்.பி.க்களும் காரணம் என்று குறிப்பிட்டார். ரூ.1238 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

More News >>