டேவிஸ் கோப்பை: பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா!

இந்தியா – பாகிஸ்தான் என்றாலே எந்த வகையிலும் எதிரி நாடாகவே பார்க்கப்படும் மனோபாவம், அனைவரது மனங்களிலும் விதைக்கப்பட்டு விட்டன. அது விளையாட்டு போட்டிகளிலும் கூட அதிகளவில் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டேவிஸ் கோப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் 29, 30ம் தேதிகளில் டேவிஸ் கோப்பை இருநாடுகளுக்கு இடையே நடைபெறும் என்றும் ஏதாவது இடையூறு ஏற்படும் பட்சத்தில் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 01ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்கள் மத்தியில், அரசியலை விதைக்காமல் அவர்களை இயல்பாக விளையாட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆனால், தீவிரவாதிகளின் அரணாக பாகிஸ்தான் விளங்குகிறது என இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் வேளையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெறும் டேவிஸ் கோப்பை திட்டமிட்டபடி இஸ்லாமாபாத்தில் நடைபெறுமா அல்லது, இரு நாடுகளுக்கும் மத்தியஸ்த்தமான வேறு ஒரு இடத்தில் போட்டி நடைபெறுமா என்பது குறித்த அறிவிப்பு வரும் நவம்பர் 4ம் தேதி முடிவு செய்யப்பட்டு இறுதி அறிவிப்பு வெளியாகும் என்ற தகவலையும் தெரிவித்துள்ளனர்.

More News >>