அமைச்சர்களுக்கு வருமான வரி.. உ.பி. அரசே செலுத்திய கொடுமை.. 38 ஆண்டு நடைமுறைக்கு முற்றுப்புள்ளி
உத்தரபிரதேசத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு மாநில அரசே வருமான வரி செலுத்தி வந்த கொடுமை கடந்த 38 ஆண்டுகளாக நடந்திருக்கிறது.
உத்தரப்பிரேதசத்தில் கடந்த 1981ம் ஆண்டில் வி.பி.சிங் ஆட்சியில் இருந்த போது, அமைச்சர்கள் சம்பளம், படிகள் ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது அமைச்சர்கள், சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர்களாக இருந்ததால், அவர்களுக்கு வருமான வரியை மாநில அரசே செலுத்தி விட்டு, முழுச் சம்பளத்தை கொடுத்து வந்தது. அவர்களின் பதவிக்காலம் முழுவதுமே வருமான வரியை அரசு செலுத்தியது.
1981ம் ஆண்டில் தொடங்கிய இந்த நடைமுறை கிட்டத்தட்ட 38 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. கல்யாண்சிங், முலாயம், ராஜ்நாத்சிங், மாயாவதி, அகிலேஷ் ஆகியோர் உள்பட 19 முதலமைச்சர்கள் பதவிக்காலத்தில் யாருமே இதைப் பற்றி சிந்திக்கவில்லை. இப்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியும் கூட சிந்திக்கவில்லை.
ஆனால், ஒரு பத்திரிகையாளர் இதை கண்டுபிடித்து செய்தியை வெளியிட்டார். அந்த காலத்தில் உண்மையிலேயே எம்.எல்.ஏ. ஏழையாக இருந்திருக்கலாம். இப்போது ஒரு ஏழையால் கவுன்சிலராக கூட வர முடியாது அல்லவா? எனவே, பணக்கார மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசு ஏன் வருமான வரி செலுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருந்தார். அது மட்டுமல்ல, அம்மாநில அரசின் முதன்மை நிதித்துறை செயலாளர் சஞ்சீவ் மிட்டலிடம் கேட்ட போது, இந்த ஆண்டு மட்டும் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு வருமான வரியாக ரூ.86 லட்சம் அரசே செலுத்த வேண்டியுள்ளது என்று பதிலளித்திருக்கிறார்.
இந்த செய்திகள் ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்படவே நேற்று(செப்.13) மாலையில், உ.பி. மாநில நிதியமைச்சர் சுரேஷ்குமார் கன்னா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், இனிமேல் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவர்களின் சம்பளம் மற்றும் படிகளுக்கு அவர்களே வருமான வரி செலுத்த வேண்டும். அரசு செலுத்தாது என்று கூறியுள்ளார்.