பேனர் உள்பட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு..
பிளாஸ்டிக் பேனர், பலூன், சிகரெட் பஞ்சு உள்பட 12 வகையான பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஒரே முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த சுதந்திரதின உரையில் குறிப்பிட்டார். இதற்காக மத்திய அரசு பெரிய பிரச்சார இயக்கத்தை நடத்தவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஒரே முறை பயன்படுத்தும் மக்காத அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் முழு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான கால அட்டவணை மற்றும் திட்டங்களை வகுக்குமாறு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் கூறப்பட்டுள்ளதாகவும், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
எளிதில் மக்காத பலூன், சிகரெட் பஞ்சு, கேரிபேக், பிளாஸ்டிக் கப், பிரியாணி பேப்பர், ஸ்ட்ரா, பிளாஸ்டிக் பாட்டில், பிளேட் மற்றும் 100 மைக்ரான் பிளாஸ்டிக் பேனர்கள் உள்பட 12 வகையான பொருட்களுக்கு தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த தடையை எப்போது முதல் அமல்படுத்தலாம், அதற்கான மாற்று ஏற்பாடுகள் என்னவென்பதை அரசு ஆராய்ந்து வருகிறது என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.