சினிமா பேனர்களுக்கும் கட்டுப்பாடு வேண்டும்.. விவேக் கருத்து

கண்ட இடங்களில் பேனர், போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப்பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்காக ரேடியல் சாலையில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் ஒன்று சரிந்து விழுந்து கம்ப்யூட்டர் இன்ஜினீயர் சுபஸ்ரீ மரணமடைந்தார். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.

இதையடுத்து, விதிகளை மீறி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றாத மாநகராட்சி, காவல் துறை அதிகாரிகளை கடுமையாக கண்டித்த ஐகோர்ட் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதிமுக, திமுக, பாமக உள்பட அனைத்து கட்சித் தலைவர்களும் தங்கள் தொண்டர்களை இனிமேல் கட்அவுட், பேனர்களே வைக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் விவேக், ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

எல்லா இடத்திலும் போஸ்டர்கள் ஒட்டும் பழக்கத்தை நான் ஏற்கனவே கண்டித்திருக்கிறேன்(காதல் சடுகுடு படத்தில்). இந்த சம்பவம்(சுபஸ்ரீ மரணம்) மிகவும் சோகமானது. துரதிர்ஷ்டமான சம்பவம். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

கண்ட இடங்களில் பேனர், போஸ்டர்கள் வைப்பது முறைப்படுத்தப்பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும்.

இவ்வாறு விவேக் கூறியுள்ளார்.

More News >>