குஜராத்தில் ஊருக்குள் புகுந்த சிங்கக் கூட்டம்.. வைரலாகும் வீடியோ...

குஜராத்தில் மழை பெய்த ராத்திரி நேரத்தில் ரோட்டுல சிங்கங்கள் மொத்தமாக செல்வதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் போட்டுள்ளார். இது வைரலாக பரவி வருகிறது.

குஜராத்தில் கிர் தேசியப் பூங்கா இருக்கிறது. இதை கிர் பாரஸ்ட் என்பார்கள். மிகப் பெரிய காடான இது, சிங்கங்களின் சரணாலயமாக விளங்குகிறது. இதற்கு அருகே உள்ள நகரம் ஜுனாகத். இதன் புறநகரில் கிர்நார்-தாலெட்டி சாலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நாள் நள்ளிரவில் மொத்தமாக ஐந்தாறு சிங்கங்கள் உலா வந்துள்ளன. இதை அப்பகுதியில் உள்ள பார்தி ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போட்டுள்ளார்.

தற்போது இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம், குஜராத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டியது. அப்போது மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வதேதரா (பழைய பரோடா) நகரின் சாலையில் மழை வெள்ளம் ஓடிய போது முதலைகள் வந்து விட்டன. இப்போது ஜுனாகத்தில் சிங்கங்களே வந்து விட்டன.

இது குறித்து, துணை வனச்சரகர் சுனில்குமார் கூறுகையில், பெரும்பாலும் இரவு நேரத்தில் இப்படி சிங்கங்கள் ஒரு திசையில் மொத்தமாக செல்லும். காலையில் மீண்டும் காட்டுக்குள் அவற்றின் வழக்கமான இடத்துக்கு போய் விடுவதுண்டு என்றார்.

 
More News >>