காந்தி சிலையை உடைக்கலாம்.. பெருமையை அழிக்க முடியாது.. பிரியங்கா காந்தி கண்டனம்
உத்தரபிரதேசத்தில் காந்தி சிலை உடைக்கப்பட்டதற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஜலாவுன் நகரில் உள்ள கல்லூரி வளாகத்தில் காந்தி சிலை நிறுவப்பபட்டிருந்தது. இந்த சிலையை யாரோ சில விஷமிகள், நள்ளிரவில் உடைத்து விட்டனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், உத்தரபிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்பு டாக்டர் அம்பேத்கர் சிலையை உடைத்தார்கள். இப்போது காந்தி சிலையை உடைத்துள்ளார்கள்.நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் ஒளிந்து வந்து, சிலையை உடைத்து, காந்தியை அவமானப்படுத்திய கோழைகளுக்கு இது வாழ்நாள் சாதனையாக இருக்கலாம். ஆனால், இப்படி செய்வதால், அம்பேத்கர், காந்தி ஆகியோரின் பெருமைகளை யாராலும் அழித்து விட முடியாது என்று கூறியுள்ளார்.
கல்லூரியில் நிறுவப்பட்டிருந்த அந்த காந்தி சிலையை, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி திறந்து வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.