இந்தியாவுடன் போர் வந்தால் பாகிஸ்தான் தோற்கலாம்.. இம்ரான்கான் கருத்து
இந்தியாவுடன் வழக்கமான போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் தோற்கலாம். ஆனால், விளைவுகள் நிச்சயம் இருக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ கடந்த மாதம் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அம்மாநிலத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், காஷ்மீருக்குள் தனது தீவிரவாத வேலைகளை காட்ட முடியாது என்று பயந்த பாகிஸ்தான் அரசு, காஷ்மீர் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக பல வழிகளில் முயன்று தோற்றது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், அந்நாட்டு அமைச்சர்களும் புலம்பத் தொடங்கி விட்டனர். அமெரிக்காவை நம்பியது தவறு, உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன என்று புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் பகுதியில் இம்ரான்கான் நேற்று ஒரு பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், இந்தியாவுன் வழக்கமான போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் தோற்கலாம். ஆனால், அதற்கு விளைவுகள் இருக்கும்.
இரு அணு ஆயுத நாடுகள் வழக்கமான போரில் ஏற்பட்டால், நிச்சயம் விளைவுகள் இருக்கத்தான் செய்யும். அதாவது, வழக்கமான போரில் பாகிஸ்தான் தோற்றால், ஒன்று இந்தியாவிடம் சரணடைய வேண்டும். அல்லது சாகும் வரை சுதந்திரத்தற்காக போர் புரிய வேண்டும். பாகிஸ்தான் எப்போதும் சுதந்திரத்திற்காக சாகும் வரை போர் புரியும் என்பதை நான் அறிவேன். எனவே, அடுத்த கட்டமாக அணு ஆயுதப் போர் வரலாம். ஆனால், நான் போருக்கு எதிரானவன்.
இவ்வாறு இம்ரான்கான் பேசினார்.