எடியூரப்பா மகன் ஊழல்.. கர்நாடக பாஜக தள்ளாட்டம்
கர்நாடகா பாஜக அரசில் உயர் அதிகாரிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணிமாற்றங்களை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா மீது எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமித்ஷாவுக்கு புகார் சென்றுள்ளது.
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியைக் கவிழ்த்து விட்டு பாஜக ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்றார். இந்நிலையில், பாஜக கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், தொழிலதிபருமான சித்தார்த்தா, வருமானவரித் துறையினரின் துன்புறுத்தலால் தற்கொலை செய்தது, முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சிவக்குமாரை கைது செய்தது போன்ற விஷயங்களால், அம்மாநிலத்தில் பெரிய ஜாதியாக உள்ள ஒக்கலிகர்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒக்கலிகர் சங்கங்கள், மைசூரு மண்டலத்தில் பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், எடியூரப்பாவுக்கு இன்னொரு தலைவலி ஏற்பட்டுள்ளது. அதாவது, சமீபத்தில் பெங்களூருவில் ஒரு முக்கியப் பதவிக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டார். ஆனால், அது 2 நாள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கு காரணம், டம்மிப் பதவியில் இருந்த அந்த அதிகாரி, முக்கியப் பதவியை பிடித்ததற்கு எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு லஞ்சம் தர வேண்டியிருந்ததாகவும், அதை கொடுத்த பின்பு அந்த உத்தரவு செயல்படுத்தப்பட்டது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பணிமாற்றத்தை விஜயேந்திராவே மேற்கொள்வதாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சர்களுக்கு இடையே புகைச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஒன்றும், இது பற்றி அமித்ஷாவுக்கு புகார் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றி முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறுகையில், உயர் அதிகாரிகள் பணிமாற்றத்தை எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவே மேற்கொள்கிறார். இதில் பல முறைகேடுகள் நடைபெறுகிறது என்றார்.
இந்த புகார்களை விஜயேந்திரா மறுத்துள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், வேண்டுமென்றே சிலர் என் மீது அவதூறாக குற்றம்சாட்டி வருகின்றனர். எனது அரசியல் வளர்ச்சியைத் தடுக்க சில சக்திகள் முயற்சி செய்து வருகின்றன என்று கூறியுள்ளார்.