அமித்ஷாவின் இந்திப் பேச்சு.. மக்களை திசைதிருப்பும் முயற்சி.. பினராயி விஜயன் கருத்து
நாடு முழுவதும் ஒரே மொழி இந்தி என்று அமித்ஷா பேசியிருப்பது, பொருளாதாரச் சரிவு உள்பட முக்கிய விஷயங்களில் இருந்து திசை திருப்பும் முயற்சி என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இந்தியாவை உலகிற்கு அடையாளப்படுத்த நாடு முழுவதும் ஒரே மொழியாக இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இதற்கு தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூலில் வெளியிட்ட பதிவில், ஒரே மொழி இந்தி என்பது தவறானது. நாட்டில் பெரும்பான்மை மக்களின் மொழி இந்தி அல்ல. அவர்களிடம் இந்தியை திணிப்பது அவர்களை அடிமைகளாக்கும் முயற்சி. உள்துறை அமைச்சரின் பேச்சு, இந்தி பேசாத மாநிலங்களின் மீதான போர்க்குரலாகும்.
தென்னிந்தியாவிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் இந்தி தெரியாதவர்கள். பெரும்பாலான மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு வந்த பிறகும் இந்தியை திணிப்பது சங்பரிவாரின் திட்டமாகும். இதன் மூலம், பொருளாதாரச் சரிவு உள்பட முக்கியப் பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்பும் முயற்சி. இதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்என்று கூறியுள்ளார்.