ஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பரிதாப சாவு.. 35 பேரை தேடும் பணி தீவிரம்
ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் இது வரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும், ஆற்றில் மாயமான 35 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் படகு சுற்றுலா பிரபலமானது. கோதாவரி ஆற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்ததால், படகுகள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. நேற்று ஆற்றில் தண்ணீர் குறைந்தாலும் படகுகளை இயக்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அப்படியிருந்தும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், படகு சுற்றுலாவுக்கு அதிகமான பயணிகள் வந்திருந்தனர். இதனால், சில படகுகள் இயக்கப்பட்டிருக்கின்றன. அதே சமயம், அந்தப் படகுகள் குறிப்பிட்ட தூரம் வரைதான் சென்று வந்தன. ஒரு படகு மட்டும் கண்டி போச்சம்மா கோயிலை சுற்றிப் பார்த்த பயணிகளை திருப்பி அழைத்து வராமல், அங்கிருந்து பப்பிகொண்டலு என்ற சுற்றுலா தலத்திற்கு அழைத்து சென்றுள்ளது. அப்போது கோதாவரி ஆற்றில் வினாடிக்கு 5 லட்சம் கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருந்தது.
அந்த படகு குச்சலூருமண்டா என்ற கிராமத்திற்கு அருகே ஆற்றில் செல்லும் போது நீர்ச்சுழலில் சிக்கி திடீரென கவிழ்ந்தது. படகில் அதை இயக்குபவர்கள் 72 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது. படகு கவிழ்ந்ததும் அனைவரும் நீரில் மூழ்கினர். அவர்களை படகு இயக்குபவர்கள் காப்பாற்ற முயன்றனர். இதற்கிடையே, குச்சலூருமண்டா கிராமத்தினர், மீனவர்களை அழைத்து வந்து ஆற்றில் குதித்து மீட்பு பணியில் ஈடுபடத் தொடங்கினர்.
தகவலறிந்து ராஜமுந்திரி நகராட்சி ஆணையர் முரளிதர்ரெட்டி, ஹெலிகாப்டரில் வந்தார். கடற்படை ஹெலிகாப்டர்கள், மீட்பு படகுகள் வரவழைக்கப்பட்டன. ஆந்திர துணை முதல்வர் அல்லகல்லி கிருஷ்ணா சீனிவாஸ், அமைச்சர் கன்னபாபு, கோதாவரி மாவட்ட கலெக்டர் சுமித்குமார் காந்தி என்று பலரும் அந்த பகுதிக்கு வந்து மீட்பு பணிகளை கவனித்தனர்.
இது வரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 35 பேரை தேடும் பணி இன்றும்(செப்.16) 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி அளிக்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களில் பலரும் தெலங்கானா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.