காஷ்மீர் நிலைமை அறிய நேரில் செல்லத் தயார்... தலைமை நீதிபதி அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் உள்ள உண்மை நிலவரத்தை அறிவதற்காக ஸ்ரீநகருக்கு நேரில் செல்லத் தயாராக உள்ளதாக தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு கடந்த ஆக.5ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக, அம்மாநிலத்தில் அசம்பாவிதங்கள் நிகழக் கூடாது என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
ஆகஸ்ட் 5ம் தேதி முதல் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்பட 400க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டு, பல இடங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த கட்டு்ப்பாடுகளை எதிர்த்து காஷ்மீர் பத்திரிகையாளர்கள் உள்பட பலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். அவற்றை இன்று தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய், நீதிபதிகள் பாப்டே, நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டைக் கூட மக்களால் அணுக முடியாத சூழ்நிலை நிலவுகிறது என்று மனுதாரர் வழக்கறிஞர் ஒருவர் கூறினார்.இதைக் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய், இது பற்றி ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் அறிக்கை கேட்போம். மக்கள், ஐகோர்ட்டை அணுக முடியவில்லை என்றால், நாம் ஏதாவது செய்ய வேண்டும். தேவைப்பட்டால் நானே ஸ்ரீநகருக்கு நேரில் சென்று அம்மாநில நிலவரங்களை பார்ப்பேன்என்று தெரிவித்தார்.
இதற்கு அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறுகையில், காஷ்மீர் மாநிலத்தில் எல்லா நீதிமன்றங்களும், லோக் அதாலத் மன்றங்களும் செயல்படுகின்றன என்றார்.