ஸ்டீவ் ஸ்மித் உலக சாதனை படைத்தும் டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்!
இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் 47 ஆண்டுகளுக்கு பிறகு டிராவில் முடிந்துள்ளது.
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் முதலில் ஆஸ்திரேலியா அசத்தி வந்தாலும், இறுதியில் இங்கிலாந்து அணி 2-2 என சமன் செய்து தொடரை டிரா செய்துள்ளது.
இந்த தொடரில் 10 முறை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக அரை சதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித் பாகிஸ்தானின் இன்சமாம் உல் அக்கின் உலக சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்தார்.
ஸ்டீவ் ஸ்மித்தின் இந்த சாதனை குறித்த பாராட்டுக்கள் முடிவதற்குள் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து சமன் செய்து தோல்வியில் இருந்து தப்பித்துக் கொண்டது.
2-1 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகித்து வந்த நிலையில், 5வது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி வெற்றி பெற்று டிரா செய்தது. இதற்குமுன் 1972ம் ஆண்டு நடந்த ஆஷஸ் தொடர் டிராவில் முடிந்ததற்கு பிறகு 47 ஆண்டுகள் கழித்து 2019ம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடர் டிராவில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆஷஸ் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கே இந்த கோப்பை வழங்கப்படும் என்பது ஆஷஸ் தொடரின் வழக்கம் என்பதால், வெற்றிக் கோப்பை ஆஸ்திரேலிய அணிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.