600-ஐ தொட்டு உலக சாதனை படைத்த மகேந்திர சிங் தோனி!

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆறாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லாவை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச போட்டிகளில் 600 கேட்சுகள் பிடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

நேற்று செஞ்சூரியன் மைதானத்தில் ஆறாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 206 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோலி 35ஆவது சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.

அதேபோல், இந்த தொடரில் மகேந்திர சிங் தோனியும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் ஹசிம் அம்லாவின் கேட்சை பிடித்தபோது சர்வதேச போட்டிகளில் ஒட்டுமொத்தமாக [டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள்] கேட்சுகள் மூலம் 600 பேரை ஆட்டமிழக்கச் செய்து சாதனை படைத்துள்ளார்.

2004ஆம் ஆண்டு அறிமுகமான தோனி 553 இன்னிங்ஸ்களில் விளையாடி 774 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இதில் 600 கேட்சுகளும், 174 ஸ்டெம்பிங்களும் அடங்கும். அதே சமயம் 144 டெஸ்ட் இன்னிங்ஸில் விளையாடி 256 கேட்சுகளும், 272 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 296 கேட்சுகளும், 75 டி 20 போட்டிகளில் விளையாடி 47 கேட்சுகளும் பிடித்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி உலகளவில் 600 பேரை ஆட்டமிழக்கச் செய்த மூன்றாவது வீரர் ஆவார். இதற்கு முன்னதாக, தென் ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் 952 பேரையும், ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் 813 பேரையும் அவுட்டாக்கி உள்ளனர்.

More News >>